கேரளாவை புரட்டிப் போட்ட கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 29 பேர் பலி: மீட்பு பணியில் ராணுவம், கடற்படை தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2 நாட்களாக புரட்டிப் போட்ட கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் 19 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 2 நாளில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் உருவானதை தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு  பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, காசர்கோடு,  வயநாடு ஆகிய 2 மாவட்டங்களை தவிர, கோட்டயம், பத்தனம்திட்டா, மலப்புரம் உள்பட  மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பேய்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  பம்பை, பெரியாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த மழை காரணமாக முல்லை பெரியாறு, இடுக்கி, நெய்யாறு உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து நெய்யார், மலம்புழா,  அருவிக்கரை உள்பட அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், நேற்று  முன்தினம் பெய்த கனமழையால் கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல், பிலாபள்ளி, இடுக்கி மாவட்டம் கொக்கையார் ஆகிய பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 20க்கும் அதிகமானோர் மண்ணுக்குள் புதைந்தனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு உடனே பொதுமக்களும்,  மீட்பு படையினரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மிகவும் தாமதமாகவே  மீட்பு பணிகள் தொடங்கின. நேற்று முன்தினம் கூட்டிக்கல் பகுதியில் இருந்து 4 சடலங்கள்  மீட்கப்பட்டன. நேற்று காலை மீண்டும் மீட்பு பணி தொடங்கியது. கூட்டிக்கல், கொக்கையார் பகுதியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப்படை, போலீசார், ராணுவம், கடற்படை மற்றும் தீயணைப்பு படை, பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கூட்டிக்கல் பகுதியில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்டன. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மார்டின் (48), இவரது மனைவி சினி (45), தாய் கிளாரம்மா ஜோசப்( 65), குழந்தைகள் சான்ட்ரா (14), சோனா 12, சினேகா (10) என 6 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன. கூட்டிக்கல் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு விட்டது.

இதைபோல், இடுக்கி மாவட்டம் கொக்கையாரில் நிலச்சரிவில் சிக்கிய 6 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இப்பகுதியில் இன்னும் 4 பேரின் புதைந்துள்ளனர். அவர்களின் சடலங்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், கோட்டயம் மற்றும் இடுக்கியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் உடல்களும் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் 19 சடலங்கள் மீட்கப்பட்டன. நேற்று முன்தினம் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம், கடந்த 2 நாளில் கேரளாவில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. கேரளாவில் நேற்று மழை குறைவாகவே பெய்தது. ஆனால், இன்னும் 2 தினங்களில் மழை மீண்டும் தீவிரம் அடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழைக்கு பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் தெரிவித்தார்.

* பினராயிடம் பிரதமர் உறுதி

கேரளாவில் கடந்த இருதினங்களாக பெய்து வரும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராய் விஜயனை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் அப்போது உறுதி அளித்தார். இதேபோல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கேரளாவில் மழையால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஒன்றிய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கேரள மக்களின் பாதுகாப்புக்காக கடவுளிடம் வேண்டுகிறேன். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More
>