தீபாவளி பண்டிகையொட்டி வரும் 1 முதல் 3ம்தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 முதல் இரவு 7 வரை இயங்க உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவு.!

வேலூர்: தீபாவளி பண்டிகையொட்டி வரும் 1 முதல் 3ம்தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 4ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழக்கமாக மாதந்தோறும் 1ம்தேதி முதல் 31ம்தேதி வரை வழங்கப்படும். ஆனால் அடுத்த மாதம் தீபாவளி வர உள்ளதால் அதற்குள் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதற்காக ரேஷன் கடைகள் திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் உணவுத்துறை அமைச்சர் தலைமையில் கடந்த 10ம்தேதி ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் அதிகபட்சமாக முன்கூட்டியே முழுமையாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 1ம்தேதி முதல் 3ம்தேதி வரை ஆகிய 3 நாட்களில் தினமும் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் சிரமப்படக்கூடாது என்று முன்கூட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளுக்கு இந்த மாத இறுதியில் அடுத்த மாதத்திற்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ரேஷன் கடைகள் திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

More
>