நெல்லை, தென்காசியில் பரவலாக கனமழை: தாமிரபரணியில் வெள்ள அபாயம்

நெல்லை: வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடையநல்லூர், மாவடிக்கால், ஆவுடையானூர், பாவூர்சத்திரம், கடையம், தென்காசி, கீழாம்பூர், மானூர், நெல்லை மாநகர், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கனமழை காரணமாக பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 17,400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 108.30 அடியாக இருந்த பாபநாசம் நீர்மட்டம், மாலை 6 மணியளவில் 125.4 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 143 அடியாகும். 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டமும் 10 மணி நேரத்தில் 24 அடி உயர்ந்தது. காலையில் 125.79 அடியாக இருந்த நீர்மட்டம், இரவு 7 மணியளவில் 149.11 அடியானது. இடைவிடாத கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவு மற்றும் தடாகத்தை தாண்டி பாலத்தின் மீது தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியது. பழைய குற்றாலத்தில் படிக்கட்டுகள் வழியாக செல்ல முடியாத அளவிற்கு வெள்ளநீர் கரைபுரண்டு ஓடியது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே கோவிட்-19 தொற்று காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>