நான்கு கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு: 89,187 இடங்கள் நிரம்பின.!

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான நான்கு கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் 89,187 இடங்கள் நிரம்பியுள்ளன. மேலும் துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதையடுத்து விண்ணப்பித்த 22,671 அரசுப் பள்ளி மாணவர்கள் உள்பட மொத்தம் 1,74,930 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் 440 கல்லூரிகளில் உள்ள 1,51,870 சேர்க்கை இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை இணைய வழியில் நடைபெற்ற அரசு பள்ளி மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 6 ஆயிரத்து 442 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 27ம் தேதி தொடங்கியது. அக்டோபர் 17ம் தேதி வரையில் நடைபெற உள்ள கலந்தாய்வு, நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதன்படி முதல்கட்ட கலந்தாய்வில் 11,224 மற்றும் 2ம் கட்ட கலந்தாய்வில் 20,438, மூன்றாம் கட்ட கலந்தாய்வில் 23,716 என மொத்தம் 55,378 பேருக்கு தற்காலிக மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் நான்காம் கட்ட கலந்தாய்வு கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் 26,515 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 7.5% உள்ஒதுக்கீட்டின் படி 7,324 மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் 473 என பொதுப்பிரிவினருக்கான நான்கு கட்ட கலந்தாய்வின் முடிவில் மொத்தம் உள்ள 1,51,870 சேர்க்கை இடங்களில் 89,187 இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2021-22 பொதுக் கலந்தாய்வின் முடிவில் நிரப்பபடாமல் உள்ள பொது, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு, பொதுக் கலந்தாய்வில் கல்ந்து கொள்ள இயலாத தகுதி வாய்ந்த மாணவர்கள் மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மானவர்கள், விண்ணப்ப கட்டணமாக ரூ.500 (எஸ்.சி, எஸ்.டி - ரூ.250) செலுத்தி  https://www.tneaonline.org  அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 19ம் தேதி மாலை 5 மணிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பத்தை பதிவு செய்யும் போதே மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலதிக தகவல்களுக்கு மேற்கூறிய இணையதளத்தையோ அல்லது 044-2912081, 82, 83, 84 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: