‘முதலிரவை தள்ளிப்போட்டார்’ முதல் திருமணத்தை மறைத்து மோசடி இளம்பெண் உள்பட 3 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவியின் தம்பி ரங்கநாதன் (34), திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, திருமண புரோக்கர்கள் பிரபு, நளினி, கோமதி (49), ராகுல் (30) மற்றும் மாரியப்பன் ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் ஆலோசனைப்படி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தென்னிலை புளியம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராதா (32) என்ற பெண்ணை, ரங்கநாதனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்போது, ரங்கநாதனுக்கு வயது அதிகமாகி விட்டதால், ₹1 லட்சம் கொடுத்தால் தான் திருமணம் செய்ய முடியும் என கெடுபிடி செய்து, பணத்தை வாங்கியுள்ளனர். அதன் பிறகு, கடந்த மாதம் அவர்களது திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு, ரங்கநாதனிடம் சரியாக பேசாத ராதா, முதலிரவை தள்ளிப்போட்டு வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ரங்கநாதன், இதுகுறித்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதையடுத்து, ராதாவின் சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் தாலி, மெட்டி மற்றும் ₹15 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதுதொடர்பாக ராதாவிடம் கேட்டபோது, தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டதாகவும், 15 வயதில் மகன் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து, ரங்கநாதனுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளார். திருமணத்தின் போது ரங்கநாதன் கொடுத்த ₹1 லட்சத்தில், ராதாவின் பங்காக கிடைத்த ₹15 ஆயிரத்தை சூட்கேசில் பத்திரமாக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன், நங்கவள்ளி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, முதல் திருமணத்தை மறைத்து ரங்கநாதனை திருமணம் செய்து கொண்ட ராதா, புரோக்கர் கோமதி, ராதாவின் நண்பர் ராகுல் ஆகியோரை கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள பிரபு, நளினி மற்றும் மாரியப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>