துரிஞ்சாபுரம் அருகே வேணுகோபால சுவாமி கோயிலில் குழந்தை வரம் வேண்டி மடி சாதம் சாப்பிட்ட பெண்கள்

கலசபாக்கம்: துரிஞ்சாபுரம் அருகே வேணுகோபால சுவாமி கோயிலில் நேற்று குழந்தை வரம் வேண்டி பெண்கள் மடி சாதம் வாங்கி சாப்பிட்டனர். கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், நாயுடுமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 5ம் சனிக்கிழமைகளில் மடி சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அப்போது, மடி சாதம் வாங்கி சாப்பிடுபவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதன்படி, புரட்டாசி 5ம் சனிக்கிழமையான நேற்று மடிசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் வழங்கிய அரிசி மற்றும் உணவு பொருட்களை கொண்டு உணவு சமைக்கப்பட்டது. பின்னர், அந்த உணவை மெகா கொப்பரையில் வைத்து, சுவாமிக்கு படையலிட்டனர். இதையடுத்து, திருமணம் நடக்கவும், குழந்தை வரம் வேண்டியும் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மடிசாதம் வாங்கி சாப்பிட்டனர். பின்னர், இரவு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள் வாணவேடிக்கை, மேளதளங்களுடன் திருவீதி உலா நடந்தது.

Related Stories: