முதுமலை வனப்பகுதிகளில் சாலையோரம் உலா வரும் மான் கூட்டம்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: முதுமலையில் சாலையோரங்களிலேயே வன விலங்குகள் சுற்றித்திரிவதால் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் மட்டுமே இப்பகுதிகளில் மழை காணப்படும். அப்போது, வனங்கள் பசுமையாக காட்சியளிக்கும். இச்சமயங்களில் உணவிற்காக சாலையோரங்களிலேயே யானை, மான், காட்டு மாடுகள் போன்றவைகள் வலம் வரும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வாடிக்கை. அதன்பின், மழை குறைந்துவிடும், வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். இதனால், வனங்களில் எதிர் பார்த்த அளவிற்கு பசுமை இருக்காது.

வன விலங்குகள் பசுமை நிறைந்த பகுதிகள் மற்றும் தண்ணீர் உள்ள பகுதிகளுக்கு திரும்பிவிடும். இதனால், சாலையோரங்களில் வன விலங்குகளை காண முடியாது. ஆனால், இம்முறை ஜூன் மாதம் துவங்கி தென்மேற்கு பருவழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. தற்போது வரை நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் உள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் காணப்படுகிறது.மேலும், எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால், யானை, மான், காட்டுமாடு போன்ற விலங்குகள் அனைத்தும் சாலையோரங்களில் சுற்றித்திரிவதால் சுற்றுலா பயணிகள் அவைகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

Related Stories: