சேரம்பாடி பகுதியில் யானை வழித்தடத்தில் சோலார் மின்வேலி: கண்டுக்கொள்ளாத வனத்துறை

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி டாஸ்மாக் கடை பகுதியில் யானை வழித்தடத்தில் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கேரளா, தமிழகம், கர்நாடகம் ஆகிய 3  மாநிலங்களின் எல்லைப்பகுதி என்பதால் யானைகள் தமிழக எல்லை  பகுதியான கூடலூர், பந்தலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகம் மாநிலங்களுக்கு  இடப்பெயர்ந்து செய்வது வழக்கம். சில பகுதிகளில் யானை வழித்தடங்களில் சோலார் மின்வேலிகள் அமைக்கப்படுவதால் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு இடப்பெயர்ந்து செய்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. அதனால் குடியிருப்புகளை நோக்கி காட்டு யானைகள் செல்கின்றது. அதன்மூலம் மனித-யானை மோதல்கள் ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதனால் மாவட்ட நிர்வாகம் யானை வழித்தடங்களில் உள்ள சோலார் மின்வேலி, முள்வேலிகள், கம்பி வேலிகள் அமைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சேரம்பாடி டாஸ்மாக் மதுபானம் கடை அருகே சுமார் 15 ஏக்கர் சுற்றுளவில் தனியார் தோட்ட உரிமையாளர் டாஸ்மாக் மதுக்கடைக்கும் சேர்த்து சோலார் மின்வேலி அமைத்திருப்பதை வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் முள் வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைத்தால் உடனடியாக அகற்றும் அதிகாரிகள் சோலார் கம்பி வேலியை அகற்றாமல் இருப்பது ஏன்? டாஸ்மாக் மதுபானம் கடை அமைந்துள்ள பகுதியில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் மதுப்பிரியர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து சோலார் மின்வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: