மேம்பால பணியில் மெத்தனம் என எடப்பாடி நீலிக்கண்ணீர் கோயம்பேடு மேம்பாலம் அக்.31 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை, அக். 17: கோயம்பேடு மேம்பாலம் வரும் அக்டோபர் 31ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் தமிழக அரசால் பாலம் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கோயம்பேட்டில் உயர்மட்ட சாலை மேம்பாலத்தை திறக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இந்த பணி ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் கடந்த 2015 செப்டம்பர் 29ம் தேதி துவக்கப்பட்டது.

 இப்பணியினை 2018 ஜூன் 28ம் தேதிக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த உயர்மட்ட மேம்பாலப்பணியுடன் சேவை சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் முழுமையாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். ஆனால் அதிமுக ஆட்சியில் எதுவும் 2018 வரை நடைபெறவில்லை.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் நேரடியாக இரு முறை கடந்த ஜூலை 18ம் தேதி, செப்.18ம் தேதி பார்வையிட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கினேன். நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு மனுவை அரசின் சார்பாக முயற்சி செய்து சாதகமான தீர்ப்பினை கடந்த செப்டம்பர் 29ம் தேதி தான் மு.க.ஸ்டாலின் அரசு பெற்றது.

அதில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும், ஆக்கிரமிப்புகளையும் சில தினங்களுக்கு முன் தான் அகற்றினோம். இப்பணிகள் எதனையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக காலத்தை வீணாக கடத்தியது அதிமுக அரசு. இறுதி கட்ட பணிகளை மு.க.ஸ்டாலின் அரசு வரும் 31ம் தேதிக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோயம்பேடு மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.  வேளச்சேரி புறவழிச்சாலையில் கடந்த 2012 ஜூன் 29ம் தேதி ரூ.108 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது.  மூன்று ஆண்டு கால தாமதத்திற்குப் பின்னர் கடந்த 2015 டிசம்பர் 23ம்தேதி ஒப்பந்ததாரர் பணியினை துவக்கினார்.

இந்த பணி ஒப்பந்தப்படி கடந்த 2018 செப்டம்பர் 22ம்தேதிக்குள் முடித்திருக்க வேண்டும். பணியினை முடிக்க வேண்டிய காலம் முடிந்த பின்னர் 23 மாதங்கள் கும்பகர்ணனை போல உறக்க நிலையில் இருந்தது அதிமுக ஆட்சி தான். வேளச்சேரி மேம்பாலப்பணியின் இரண்டாம் அடுக்கினை வரும் 31ம் தேதிக்குள்ளும் முதல் அடுக்கினை டிசம்பர் 31ம் தேதிக்குள்ளும் முடிக்கும்படி அதிகாரிகளுக்கும், ஒப்பந்தக்காரருக்கும் அறிவுரை வழங்கினேன்.  இரண்டாம் அடுக்கு இம்மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். மேடவாக்கம் மேம்பாலப்பணி மதிப்பீடு ரூ.133.10 கோடியில் கடந்த 2015ல் ஆகஸ்ட் 14ம் தேதி வழங்கப்பட்டது. இப்பணிக்கான உத்திரவு கடந்த 2016 ஜூன் 8ம் தேதி சன்ஷைன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

ஒப்பந்தக்காரர் பணியினை செயல்படுத்துவதில் மெத்தனமாக இருந்ததால் ஒப்பந்தம் கடந்த 2018 ஆகஸ்ட் 14ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மறுபடியும் ஒப்பந்தம் கோரி ரெனாட்டஸ் நிறுவனத்திற்கு கடந்த 2012 டிசம்பர் 12ம் தேதி பணி உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் கடந்த 2020 செப்டம்பர் 12ம் தேதிக்குள் பணியினை முடித்திருக்க வேண்டும். ஆனால், இப்பணி முடிக்கப்படவில்லை. மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணியினை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளேன். ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி அரசு தான்.  இன்று போக்குவரத்து நெரிசலை குறைத்திட சாலை மேம்பாலப்பணிகள் கால தாமதமாக நடைபெறுவதாக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: