×

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சாதனை கணையத்தில் நுண்அறுவை சிகிச்சை

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையின் டீன் டாக்டர்.சாந்தி மலர், இரைப்பை, குடல், கணையம் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சைத்துறை தலைமை மருததுவர் எல்.ஆனந்த் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் வாலாஜாபாத்தை சேர்ந்தவர் அறிவழகன்(43). எலக்ட்ரீசியன். அறிவழகன்  குடிப்பழக்கம் உள்ளவர். இதனால், கணையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.  உயிருக்கு ஆபத்தான நிலையில் அறிவழகன்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

இங்கு மருத்துவமனை டீன் டாக்டர் சாந்திமலர் மேற்பார்வையில்  இரைப்பை,குடல், கணையம்,மற்றும் கல்லீரல் அறுவைச் சிகிச்சைத் துறை தலைமை மருத்துவர் எல்.ஆனந்த் தலைமையிலான டாக்டர் குழுவினர் அறிவழகனை பரிசோதித்தனர். அப்போது அறிவழகனின் குடிப்பழக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டு கணையத்தைச் சுற்றி ரத்த நாளங்கள் விரிவடைந்து, நீர்கட்டி உண்டாகி ரத்தநாளங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிறுகுடல் வழியாக மலக்குடலில் இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளதும்,கணையத்தில் அழற்சி மற்றும் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதும்  கண்டறியப்பட்டது.

எனவே, கடந்த மாதம் 24-ந்தேதி டாக்டர் குழுவினர் அறிவழகனின் கணைய நீர்கட்டிக்கு உள்ளேயும், வெளியேயும் இரத்தம் கசிந்த இரத்த நாளங்களில்  நுண் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். இது ஒரு அரிய அறுவை சிகிச்சையாகும்.இந்த அறுவை சிகிச்சை செய்ய 7 மணி நேரம் ஆனது.நோயாளிக்கு 7 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. தற்போது அவர் பூரண குணமடைந்துள்ளார்.

அவரது கணையம் நன்றாக செயல்படுகிறது. அவரால் நன்றாக சாப்பிட முடிகிறது. விரைவில் வீடு திரும்பும் நிலையில் உள்ளார்.   இந்த அறுவை சிகச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் நோயாளிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் செலவாகும். ஆதலால் இங்கு அறிவழகனுக்கு முதலமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Tags : Lower Government Hospital , Subordination, Government Hospital, Achievement,
× RELATED ரெம்டெசிவிர் மருந்திற்காக சென்னை...