அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி மாணவர்களை துன்புறுத்தினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

திருவெறும்பூர்: பள்ளிக்கு வரும் மாணவர்களை துன்புறுத்தினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். துவாக்குடியிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புதிய குளிர்சாதன நகர பேருந்து இயக்கத்தை திருவெறும்பூரில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகம்  முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதை போல, பள்ளி  ஆசிரியர்களுக்கு ‘‘ஜீரோ கவுன்சிலிங்’ நடத்த வாய்ப்பில்லை.

ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு  வருகின்றன. கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் பணியின்போது  உயிரிழந்திருந்தால், அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை  வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு  செல்லப்படும். ருத்ராட்சம்  அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என மாணவர்களை, சில பள்ளி நிர்வாகம்  தெரிவித்துள்ளது. மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே ஆசிரியர்களின் கடமை.  

மாறாக அவர்களுக்கு எந்த ஒரு பாகுபாடும் பார்ப்பதோ, அவர்களை துன்புறுத்தவோ  கூடாது. பள்ளிக்கு வரும் மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை  எடுக்கப்படும். நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த  அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. இதுகுறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: