நெடுஞ்சாலைத்துறையில் பணிமாறுதல் வழங்கப்பட்டும் பணிக்கு செல்லாமல் வீட்டில் உள்ள பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: முதன்மை இயக்குனர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் பணிமாறுதல் வழங்கப்பட்ட இடத்தில் பணியில் சேராமல் உள்ள பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை இயக்குனர் குமார் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் விருப்பத்தின் பேரில் பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் 280 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து கடந்த மாதம் கோட்ட பொறியாளர்கள் 58 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட உதவி பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர்களில் பலர் தற்போது வரை பணியில் சேரவில்லை என்று தெரிகிறது.

இதில், சிலர் தற்போது வரை விடுப்பில் தான் உள்ளனர். சிலர் பணி மாறுதல் செய்யப்பட்டாலும், அதே இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பணிமாறுதல் வழங்கப்பட்ட இடத்தில் பணியில் சேராத பொறியாளர்கள் மீதும், பணியில் இருந்து விடுவிக்காமல் மற்றும் பணியில் சேர அனுமதிக்காமல் இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது தமிழ்நாடு குடிமை பணிகள் விதியின் கீழ் ஓழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் குமார் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ெநடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வந்த கோட்ட பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலும் மற்றும் நிர்வாக காரணங்களினாலும் பணியிட மாறுதல் செய்து வெவ்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடத்தில் பணியில் சேராதவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு முறை மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17 (ஏ)ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த 1ம் தேதி மின்னஞ்சல் மூலமாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், இது தொடர்பாக எவ்வித பதிலும் பெறப்படவில்லை.

ஆகவே, பணிமாறுதல் வழங்கப்பட்டு இதுநாள் வரை பணியில் சேராமல் இருக்கும் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீதும், இப்பொறியாளர்களை இதுநாள் வரை பணியில் இருந்து விடுவிக்காமல் மற்றும் பணியில் சேர அனுமதிக்காமல் இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது தமிழ்நாடு குடிமை பணிகள் விதியின் கீழ் ஓழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடத்தில் பணியில் சேராதவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

Related Stories:

More
>