அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில் நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றுவது எப்படி?...வழிகாட்டி நெறிமுறை வெளியீடு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான, பயன்பாடற்ற நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றும் பணிகளுக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறையை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை  ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

* கோயிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் விலை உயர்ந்தவைகளை அவைகள் காணிக்கையாக வரப்பெற்றிருந்து அல்லது கோயிலுக்காக செய்யப்பட்டிருந்து தற்போது தேவைக்கு ஏற்றதாக இல்லாமலோ அல்லது பழுது ஏற்பட்டிருந்தாலோ அந்த இனங்களை உருவாக்கவோ அல்லது பழுதுபார்க்கவோ அல்லது வேறு இதர மராமத்து வேலைகள் செய்யவோ தேவையிருப்பின், ஆணையரின் முன் அனுமதி பெற வேண்டும்.

* நகையை உருக்குதல், பழுதுபார்த்தல் அல்லது முலாம் பூசுதல் ஆகிய எந்த பணியும் இவ்வலுவக முன் அனுமதியின்றியோ அல்லது சட்டப்பிரிவு 42ன் கீழ் உள்ள விதிகளுக்கு மாறாகவோ செய்யக் கூடாது. ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையிலான குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணையரின் முன் அனுமதியினை பெற்றுதான் இத்தகயை பணிகளில் நகை சரிபார்க்கும் அலுவலர் ஈடுபட வேண்டும். தன்னிச்சையாக இயங்கக் கூடாது. இந்த உத்தரவுகள் மீறப்படாமல் கண்காணிக்கப்பட வேண்டியது, இணை ஆணையர்களின் பொறுப்பாகும். இந்த உத்தரவுக்கு மாற்றாக செயல்படுபவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கையை தொடர்ந்து அந்த விவரத்தை ஆணையர் அலுவலகத்திற்கு இணை ஆணையர் அறிவிக்க வேண்டும்.

* பழைய புராதானமான ஆபரணங்கள், விலை உயர்ந்த கற்கள் வைத்த இனங்களை உருக்கக் கூடாது.

* பொன் இனங்களின் வரிசை எண், விவர பட்டியல் தயார் செய்ய வேண்டும்.

* நகைகளில் ரத்தினங்கள் இருந்தால், அவைகளை தனியாக நீக்கி எடுக்க வேண்டும். அதை குறிப்பு எடுத்து வைக்க வேண்டும்.

* பொன் இனங்கள் பிரிக்கப்பட்டவுடன் பிரிக்கப்பட்டதை தனித்தனியே எடைபோட ேவண்டும்.

* உருக்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள இனங்கள் குறித்து உரிய பதிவேட்டில் (பதிவேடு, காணிக்கை பதிவேடு) உரிய பதிவுகளை மேற்கொண்டு ஆணையர் உத்தரவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு துணை ஆணையர்/நகை சரிபார்ப்பு குழுவினர் சான்றளிக்க வேண்டும்.

* ஒரு கிலோ எடைக்கு அதிகமாகவுள்ள பல மாற்று பொன் இனங்கள் மும்பையில் உள்ள சுத்திகரிப்பு சாலையில் தான் உருக்கப்பட வேண்டும். தங்கம் உருக்குதலுக்கு எடுத்துச் செல்லும் முன்னர், பொன் இனங்களை முதலில் காப்பீடு செய்து கொள்வது அவசியமாகும். மேலும், அவற்றை காவல்துறை பாதுகாப்புடன் மும்பைக்கு எடுத்து செல்ல வேண்டும்.பொன் இனங்கள் மும்பையில் உருக்கும் பணி ஓய்வு பெற்ற நீதிபதிகளின் முன்னிலையில் நடைபெற வேண்டும்.

* பிரிக்கப்பட்ட பொன் இனங்களை குகையில் வைத்து உருக்கி கட்டிகளாக ஊற்றிய பிறகு அவைகளின் எடையை குறிக்க வேண்டும். இந்த கட்டியில் இருந்து ஒரு துண்டு மிச்சம் வெட்டி எடுத்து வைக்க வேண்டும். இதனுடைய மாற்று குறிக்கப்பட வேண்டும்.

*  உருக்கி சுத்தம் செய்யும் போது சம்பந்தப்பட்ட கோயிலின் நிர்வாக அதிகாரியும், அறங்காவலரும், இந்த இலாகா அலுவலர்களுடன் உடன் இருக்க வேண்டும்.

* நகையை உருக்கி சுத்தம் செய்து எடையிட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

* நீதிபதி தலைமையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். அவற்றின் பிரதி கோயில் அலுவலகத்தில், மற்றொரு பிரதி இணை ஆணையர் அலுவலகத்தில், ஒரு பிரதி  ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

Related Stories:

More
>