மைசூர் புத்துணர்வு முகாமில் மயக்கம் தெளிந்த ஆட்கொல்லி புலிக்கு தனி அறையில் தீவிர சிகிச்சை

கூடலூர்: மைசூர் புத்துணர்வு முகாமில் மயக்கம் தெளிந்த ஆட்கொல்லி புலிக்கு தனி அறையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மக்களை  அச்சுறுத்தி வந்த டி23 புலி நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் மயக்க  ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டது. முன்னதாக புலிக்கு மயக்க  ஊசி செலுத்துவதற்காக உதயன் மற்றும் சீனிவாசன் ஆகிய 2 கும்கி யானைகள்  வனத்துறையினருக்கு உதவின. அதில் சென்ற கால்நடை மருத்துவர்கள், வனச்சரகர்கள் குழுவினர்தான் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் டிரோன் கேமரா மூலம் புலியின்  இருப்பிடத்தை கண்டறிந்து, முட்புதர்களை  வெட்டி அகற்றி புலியை மீட்டு அங்கிருந்து 20 பேர் தூக்கி வந்து கூண்டில் அடைத்தனர்.

அப்போது புலி சோர்வாக இருந்தது. அதன் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது. சிகிச்சை அளிப்பதற்காக கர்நாடக மாநிலம் மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்கு புத்துணர்வு சிகிச்சை முகாமுக்கு கொண்டு சென்றனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் புலி மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூண்டில் வைத்தபடியே கால்நடை மருத்துவ குழுவினர் புலிக்கு குளுக்கோஸ் செலுத்தினர். நீண்ட நேரத்திற்கு பிறகு புலி மயக்கம் தெளிந்து கண் விழித்து ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதையடுத்து அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. அங்குள்ள தனி அறைக்கு புலியை மாற்றினர். முதல்கட்டமாக மயக்க ஊசியில் செலுத்திய மருந்துகளின்  தாக்கத்திலிருந்து வெளி வருவதற்கு தேவையான மருந்துகள் புலிக்கு அளிக்கப்பட்டது.

சோர்வாக இருந்ததால் உணவாக  கோழி இறைச்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மைசூரு வனவிலங்கு சரணாலய செயல் இயக்குநர் அஜித் குல்கர்ணி கூறுகையில், ‘புலிக்கு உடலில் காயங்கள் உள்ளது. அதன் உடல் நலம் தொடர்பாக இப்போது எதுவும் கூற முடியாது. ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘புலியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து பராமரித்து வருகிறோம்.

புலிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் டி23 புலிக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம். அதன் உடலில் 9 இடங்களில் காயங்கள் இருப்பதும், அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள காயத்தில் புழுக்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மற்ற காயங்களுக்கு சிகிச்சை அளித்துள்ள நிலையில் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப சிகிச்சை முறையில் மாற்றம் செய்யப்படும். புலியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’’ என தெரிவித்தனர்.

Related Stories: