நேரில் கண்ட சாட்சிகளிடம் பெறப்படும் தாமதமான வாக்குமூலத்தை நிராகரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ‘நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலம் தாமதமாக பாதியப்பட்ட காரணத்திற்காக, அதை நிராகரிக்க முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை வழக்கில் 4 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘சம்பவத்தை நேரில் கண்ட இரண்டு சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலம் பெறவும், அதை அறிக்கையாக பதிவு செய்யவும் தாமதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தாமதங்கள் வழக்கு விசாரணைக்கு பாதகமானவை. அதே சமயம் சாட்சிகளின் வாக்குமூலம் பெற ஏன் தாமதம் என்பதை விளக்கவில்லை. இந்த சாட்சியங்களைத் தவிர குற்றத்தை நிரூபிக்க வேறெந்த ஆவணங்களும் இல்லை,’’ என்றார். இதற்கு அரசு தரப்பு வக்கீல், ‘‘குற்றவாளிகளால் அச்சப்படுத்தப்பட்டதாலேயே சாட்சிகள் பயந்து ஓடினர். பின்னர், குற்றவாளிகளை கைது செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகே சாட்சிகள் வாக்குமூலம் தர முன்வந்தனர். இதுதான் தாமதத்திற்கு காரணம்,’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘நேரடி சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்ய ஏற்படும் தாமதத்தால், அந்த வாக்குமூலத்தையே நிராகரித்து விட முடியாது. சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் போதுமான அளவு விளக்கப்பட்டுள்ளது. எனவே, கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும்,’’ என உத்தரவிட்டு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: