மேலும் 2 இந்துக்கள் அடித்துக் கொலை வங்கதேசம் முழுவதும் வன்முறை பரவியது: இஸ்கான் கோயிலுக்கு தீ வைப்பு

தாகா: வங்கதேசத்தில் துர்கா பூஜையில் ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரவி உள்ளது. சுமார் 200 பேர் கும்பல் இஸ்கான் கோயிலை தகர்த்து தீ வைத்துள்ளது. மேலும், 2 இந்துக்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். வங்கதேசத்தின் கொமிலா பகுதியில் அமைக்கப்பட்ட துர்கா பந்தலில், இஸ்லாமியர்களின் குரான் அவமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து, ஹாஜிகன்ச் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டனர். துர்கா பந்தல்களை உடைத்தெறிந்த அவர்கள், இந்து கோயில்களை அடித்து சேதப்படுத்தினர். அதோடு, இந்துக்கள் பலரும் கடுமையாக தாக்கப்பட்டனர். அங்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 4 இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை பன்சாகாலி, பெகுவா, பெகும்கஞ்ச் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவியது.

வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும், வன்முறை கும்பல் வங்கதேசத்தின் பல நகரங்களிலும் இந்துக்களின் சொத்துக்களை சூறையாடி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, நோகாலி மாவட்டத்தில் இஸ்கான் கோயிலுக்குள் புகுந்த 200 பேர் கொண்ட அங்குள்ள பந்தல்களை அடித்து உடைத்து கோயிலுக்கு தீ வைத்துள்ளது.

மேலும், கோயில் நிர்வாகி பார்தா தாஸ் என்பவர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், கோயில் குளம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜதன் குமார் சாஹா என்பவரும் கும்பல் தாக்கியதில் பலியாகி உள்ளார். மேலும், பல இந்துக்கள் பலத்த காயமடைந்து இருப்பதாகவும், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்கான் கோயில் நிர்வாகம் டிவிட்டர் மூலமாக வலியுறுத்தி உள்ளது.

தாய், மகள் மற்றும் 10 வயது சிறுமி பலாத்காரம்

ஹாஜிகன்ச் பகுதியில் இந்து கோயில்களை சூறையாடிய கும்பல், அப்பகுதியில் இந்து குடும்பம் வசிக்கும் வீடு ஒன்றில் புகுந்து, தாய், மகள், அவர்களின் உறவினரான 10 வயது சிறுமி என 3 பேரையும் பலாத்காரம் செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. பெரும் அதிர்ச்சி அளிக்கும் இந்த பலாத்காரம் தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என வங்கதேச இந்துக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: