‘சாம்பார் ஏன் டேஸ்டா இல்ல’ தாய், சகோதரியை சுட்டு கொன்ற வாலிபர்

பெங்களூரு: ‘சாம்பார் ஏன் ருசியாக இல்லை’ என கேட்டு தாய் மற்றும் சகோதரியை வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  வட கர்நாடக மாவட்டம் சித்தாபுரா தாலுகா குடிகோடு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா. இவரது மனைவி பார்வதி (42). இவரது மகள் ரம்யா (19). மகன் மஞ்சுநாத் ஹஸ்லர் (24). இவர், குடிபோதைக்கு அடிமையானவர். தினமும் போதையில் வந்து தாய் மற்றும் சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களாக சகோதரிக்கு செல்போன் வாங்கி கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. சகோதரி தனக்கு செல்போன் வேண்டுமென்று அடம் பிடித்தார்.

போதையில் இருந்த மஞ்சுநாத், சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் சாப்பிடுவதற்கு அமர்ந்தார். அப்போது, சாம்பார் மற்றும் சாதம் கொடுக்கப்பட்டது. இதை சாப்பிட்ட மஞ்சுநாத், ‘சாம்பார் ஏன் ருசியாக இல்லை. வேறு குழம்பு கொடு’ என கேட்டுள்ளார். தாய் இல்லை என்றதும், அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.  தாயும், சகோதரியும் சேர்ந்து, மஞ்சுநாத்திடம் வாக்குவாதம் செய்தனர். போதையில் இருந்த மஞ்சுநாத் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து, பார்வதி மற்றும் ரம்யாவை சுட்டுவிட்டு தப்பினார். படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

இரவு வேலை முடித்துவிட்டு தந்தை வீட்டிற்கு திரும்பிய போது மனைவி மற்றும் மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சித்தாபுரா ேபாலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரித்தனர். அதில், மஞ்சுநாத் பயன்படுத்திய துப்பாக்கி விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் நாட்டு துப்பாக்கி என்று தெரியவந்தது. இதற்கு முறையான அனுமதி எதுவும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மஞ்சுநாத்தை கைது செய்தனர்.

Related Stories:

More
>