காஷ்மீரில் லஷ்கர் கமாண்டர் உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தொடர் தாக்குதல், தீவிர தேடுதல் வேட்டையினால் எரிச்சல் அடைந்துள்ள தீவிரவாதிகள், தங்கள் கவனத்தை அப்பாவி பொதுமக்கள் மீது திருப்பி உள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 7 பேரை அவர்கள் சுட்டு கொன்றனர். இதனால், தீவிரவாதிகள் மீதான வேட்டையை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்களை தீவிரவாதிகள் கொன்றனர்.

இதனிடையே, ரகசியத் தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, பாம்போர், புல்வாமா பகுதிகளில் நேற்று தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில், புல்வாமாவில் நடந்த துப்பாக்கி சண்டையில், லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உமர் முஸ்தாக் காண்டே சுட்டுக் கொல்லப்பட்டான். இவன், ஸ்ரீநகரில் ராணுவ வீரர்கள் முகமது யூசுப், சுகைல் ஆகியோரை கொன்றது உள்பட பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவன்.

மற்றொருவன் பாம்போர் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டான். இதில், காண்டே தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதல் 10 பேரில் இடம் பெற்றிருந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் 2 பேர் கொலை: கடந்த வாரத்தில் பொதுமக்கள்  7 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்,   பிழைப்பு தேடி வந்த 2 பேரை நேற்று சுட்டு கொன்றனர். ஸ்ரீநகரில் கடை வைத்திருந்த பீகாரை சேர்ந்த அரவிந்த் குமார் ஜா (30), உ.பி.யைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி சாகிர் அகமதுவை கொன்றனர்.

Related Stories:

More
>