ஐசிசி டி20 உலக கோப்பை தகுதிச் சுற்று இன்று தொடக்கம்

அல் அமீரத்: ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஒமானில்  இன்று தொடங்குகிறது. கொரோனா பீதி காரணமாக  இந்தியாவில் நடைபெற வேண்டிய டி20 உலக கோப்பைத் தொடர்,  வளைகுடா நாடுகளில் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது. இலங்கையில் நடைபெற இருந்த தகுதிச் சுற்று ஆட்டங்களும்  வளைகுடா நாடுகளுக்கு  மாற்றப்பட்டன. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு ஏற்கனவே நேரடியாக  தகுதி பெற்றுள்ளன. மற்ற 4 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று இன்று முதல் அக்.22ம் தேதி வரை ஒமான், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறும்.

தகுதிச் சுற்றில் விளையாட உள்ள 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து,  இலங்கை ஆகிய அணிகளும்,  பி பிரிவில்  வங்கதேசம், ஒமான், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த 2 பிரிவுகளிலும்  முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். அந்த சுற்றின்  முதல் பிரிவில் தென் ஆப்ரிக்கா, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ்,  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், பி பிரிவில் 2வது இடம் பிடிக்கும் அணியும் இடம் பெறும்.

2வது பிரிவில்  நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன், பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், ஏ பிரிவில் 2வது இடம் பிடிக்கும் அணியும் இடம் பெறும். சூப்பர் 12  சுற்று ஆட்டங்கள் அக்.23ம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா,  இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில்  அக்.24ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஐசிசி உலக கோப்பை டி20 தகுதிச் சுற்றில் இன்று...

பி பிரிவு        ஒமான்-பாப்புவா நியூ கினியா

களம்        அல் அமீரத்

தொடக்கம்    பிற்பகல் 3.30

பி பிரிவு        வங்கதேசம் - ஸ்காட்லாந்து

களம்        அல் அமீரத்,

தொடக்கம்    இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Related Stories: