சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்தது பெங்களூரு சிறையில் இருந்து சுதாகரன் விடுதலை: கூடுதலாக 9 மாதம் இருந்ததால் ரூ.10 கோடி மிச்சம்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி நான்கரை ஆண்டுகளுக்கு மேல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுதாகரன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். ரூ.10 கோடி அபராதம் செலுத்தாததால் கூடுதலாக 9 மாதம் சிறைவாசம் அனுபவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டணை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்பட 3 பேருக்கு ரூ.10 கோடி 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணமடைந்ததால், சசிகலா உள்பட 3 பேரும் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டு காலம் தண்டணை முடித்த சசிகலா, ரூ.10கோடியே 10 ஆயிரம் அபராத தொகையை செலுத்திவிட்டு, கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையாகினார். இளவரசியும் அன்றைய தினமே விடுதலையானார். ஆனால், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் அபராத தொகை ரூ.10 கோடியை செலுத்துவதற்கு பதிலாக, சிறை வாசம் அனுபவித்து கழிப்பதாக கூறினார். இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அவரை மீண்டும் 9 மாதங்கள் அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருப்பினும் சிறையில் இருந்தப்படியே தான் தண்டணை காலத்திற்கு முன்பே சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கு தேவையான முயற்சிகளை சுதாகரன் மேற்கொண்டார். இது தொடர்பாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தை நாடிய சுதாகரன், 2007ம் ஆண்டு தண்டணை பெற்றபோது 123 நாட்கள் சிறையில் கழித்துள்ளேன். அவற்றை கணக்கில் கொண்டு தன்னை 4 மாதங்களுக்கு முன்னே விடுதலை செய்ய வேண்டுமென்று கூறியிருந்தார். இதை ஏற்ற நீதிபதி சிறை நிர்வாக அதிகாரிகள் அளித்த விளக்கம் மற்றும் அறிக்கையை வைத்து 89 நாட்களை கணக்கிட்டு, அவரை அக்.16ம் தேதி விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது.

அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைசாலையில் இருந்து சுதாகரன் விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்பதற்கு அமமுக தொண்டர்கள் ஏராளமானவர்கள் சிறையின் முன்பு குவிந்தனர். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி போலீசார் அவரை 100 மீட்டர் தொலைவில் நிறுத்தி வைத்தனர். சிறையின் நுழைவுவாயிலில் இருந்து நடந்தப்படி வந்த சுகாதாகரனுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர், பரப்பன அக்ரஹாராவை அடுத்த கூடலுகேட் என்ற பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று சுதாகரன் சாமி தரிசனம் செய்து விட்டு, சென்னைக்கு புறப்பட்டார்.

ரூ.10 ஆயிரம் மட்டுமே அபராதம் செலுத்தினார்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சுதாகரனுக்கு நீதிமன்றம் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமாக விதித்தது. அந்த தொகையை செலுத்தினால் அவர், சசிகலாவுடன் விடுதலையாகியிருக்க கூடும். ஆனால், அவர் அந்த அபராத தொகையை கட்டாமல், கூடுதலாக ஒரு ஆண்டு சிறையிலேயே கழிக்க முடிவு செய்தார். தற்போது நீதிமன்றத்தில் முறையிட்டு முன்கூட்டியே விடுதலையாக இருக்கும் அவர் ரூ.10 கோடி செலுத்தாமல், ரூ.10 ஆயிரத்தை மட்டும் அபராதமாக செலுத்தியுள்ளார்.

Related Stories: