கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுடன் தலைமைச் செயலாளர் கலந்துரையாடல்

சென்னை:கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு  கலந்துரையாடினார். சென்னை கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில், பொருளாதாரம், கல்வியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த 12ம் வகுப்பில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் கல்லூரியில் சேர, ஒவ்வொரு ஆண்டும், தலைமை செயலாளர் வெ.இறையன்பு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், இங்கு செயல்பட்டு வரும் டாக்டர் அப்துல் கலாம் மக்கள் நல சங்கம் சார்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு  செய்யபட்டு இருந்தது. அதில், தலைமை செயலாளர் வெ.இறையன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். அப்போது அவர், மாணவர்களிடம்,  அவர்களின் முதல் நாள் கல்லூரி அனுபவங்கள்,  அவர்களின் நோக்கங்கள், அதற்கான செயல்பாடுகளையும் கேட்டறிந்து கலந்துரையாடினார். மேலும், ஊதியம் பெறாமல் கற்பித்து வரும் மாலை நேர பயிற்சி வகுப்பு ஆசிரியர்களிடம் பேசிய அவர், ‘‘மற்றவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

மற்றவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கும், சமுதாய மாற்றத்திற்கும் பேருதவியாக இருக்கும். உங்களுடைய  சமூகத்திற்கான பணிகள் தொடர, நானும் என்னை போன்றோரும் எப்போதும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.’’ என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், டாக்டர் அப்துல்கலாம் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: