தொடர் கனமழை வெள்ளம் நிலச்சரிவால் கேரளாவில் 10 பேர் பலி: 17 பேர் புதைந்தனர்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழையால் 10க்கும்  மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 20க்கு மேற்பட்டோர் மண்ணிற்குள் புதைந்தனர். இவர்களில் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4 பேர் பலியாகினர். அரபிக்கடலில் குறைந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து கடந்த 2 தினங்களாக  கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்  முல்லை பெரியாறு, இடுக்கி உள்பட பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.  

இடுக்கி அணை உச்சத்தை எட்டி வருவதால் முதல் கட்ட நீல எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் மாநிலம் முழுவதும் பலத்த  மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில்  வெள்ளம் புகுந்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்   திட்டா, மலப்புரம், கோழிக்கோடு உள்பட 11 மாவட்டங்களுக்கு  நேற்று கனமழைக்கான ஆரஞ்சு  எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும்   விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பகல் கோட்டயம் மாவட்டம், கூட்டுகல் அருகே பிலாபள்ளி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளில் 13 பேர் இருந்திருக்கலாம்என்று கருதப்படுகிறது. அனைவரும் மண்ணில் புதைந்தனர். அந்த பகுதியினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 6 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுபோல், இடுக்கி மாவட்டம், கொக்கையாறு அருகே உள்ள பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கும் 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 10 பேர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், 10க்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், இடுக்கி மாவட்டத்தில் ஆன்சி என்ற பெண்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு  பலியானர். இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே  பாலத்தில் ெசன்று கொண்டருந்த  கார் அடித்து செல்லப்பட்டது. இதில் இருந்த வாலிபரும், இளம்பெண்ணும்  வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். இருவர் சடலங்களும் மீட்கப்பட்டன.  

திருவனந்தபுரம் கண்ணம்மூலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ெதாழிலாளி  ெநகர் தீப் குமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியானார். கோட்டயம் அருகே  பூஞ்ஞாறில் அரசு பஸ் வெள்ளத்தில் மூழ்கியது. அப்பகுதியினர் விரைந்து  சென்று பஸ்சில்  இருந்த பயணிகளை  மீட்டனர்.

கனமழையை தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக ராணுவத்தின் உதவியை முதல்வர் பினராய் விஜயன் கேட்டுள்ளார். கோட்டயத்தில் மீட்பு பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது. விமானப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். கோவை மாவட்டம், சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்கள் கொச்சி விரைந்துள்ளன.

சபரிமலையில் 2 நாள் பக்தர்களுக்கு தடை

கேரளாவில் 19ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 17, 18 ஆகிய தேதிகளில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

அணைகள் திறப்பு

கனமழையை தொடர்ந்து மலம்புழா, நெய்யாறு உட்பட ஏராளமான அணைகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து ஆறுகளிலும் ெவள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை ஆறு கரை புரண்டு ஓடுகிறது.

Related Stories:

More
>