×

கட்சி தலைவர் பிரச்னையை கிளப்பிய அதிருப்தி தலைவர்களுக்கு சோனியா கண்டனம்: காங்கிரஸ் செயற்குழுவில் பரபரப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பிரச்னையை கிளப்பிய ஜி-23 குழுவை சேர்ந்த மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட அதிருப்தி தலைவர்களுக்கு செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கட்சி பிரச்னையை பொதுவெளியில் பேசக் கூடாது என்றும் எச்சரித்தார். பஞ்சாப் காங்கிரசில் சில வாரங்களுக்கு முன், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி நவஜோத் சிங் சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு சம்பவங்களால், கட்சி தலைமை தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி முதல்வர் பதவியை அமரீந்தர் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து சித்துவும் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமரீந்தர் சந்தித்து பேசியதால், அவர் பாஜ.வில் சேர போவதாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் தொடர்ந்து வெளியேறுவது கவலை அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், ‘ஜி-23’ என்று அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் குழுவை சேர்ந்தவருமான கபில் சிபல், ‘எங்கள் கட்சியில் தலைவர் இல்லை. அதனால்தான், இதுபோன்ற விவகாரத்தில் இறுதி முடிவை யார் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை?’ என குற்றம்சாட்டினார். இதை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் அவருடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டனர்.

 இதற்கு, ஜி-23 குழுவை சேர்ந்த குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கடும்  கண்டனம் தெரிவித்தனர். கட்சியில் நடக்கும் பிரச்னை, தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க, செயற்குழு கூட்டத்தை கூட்டும்படியும் வலியுறுத்தினர். கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கும் கடிதம் எழுதினர். இதை ஏற்று, அக்டோபர் 16ம் தேதி செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத்,  மல்லிகார்ஜுனா கார்க்கே, ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம், செல்லக்குமார், முகுல் வாசினிக், ஏ.கே.அந்தோணி, ஜெயராம் ரமேஷ், மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்,  சோனியா காந்தி பேசியதாவது: நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான சூழலில் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்று வருகிறது. அத்தியாவசிய உணவு பொருட்கள், எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் செல்கிறது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100 தாண்டும் என மக்கள் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். சிலிண்டர் விலை ரூ.1000-த்தை தொட உள்ளது. சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இவை எல்லாம், நாட்டு மக்களுக்கு தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தி உள்ளன.  ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சிறுபான்மை மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.

 ஒன்றிய அரசின் தவறான வெளியுறவு கொள்கைகளால், நாடு பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இந்திய எல்லைகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. அதை தடுக்க ஒன்றிய அரசு எந்த துரித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது, நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஒற்றுமை, சுய கட்டுப்பாட்டின் மூலம் மட்டுமே, கட்சிக்கு உயிரோட்டம் அளிக்க முடியும்.

தற்போதைய நிலையில், கட்சியின் முழு நேரத் தலைவர் நான்தான். இருப்பினும், உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். கட்சி சம்பந்தப்பட்ட எதையும் வெளிப்படத்தன்மையுடன் பேசுவதை எப்போதும் மதிக்கிறேன். அதே நேரம், உட்கட்சி விவகாரங்களை பற்றி ஊடகங்கள் மூலமாக யாரும் (ஜி-23 தலைவர்களை மறைமுகமாக குறிப்பிட்டு சோனியா இதை பேசினார்) என்னிடம் பேச வேண்டிய தேவையில்லை. சுதந்திரமாகவும், ஜனநாயக முறைப்படியும் அனைத்து விவகாரங்களையும் நேரடியாகவே என்னிடத்தில் விவாதிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

சோனியா மீது முழு நம்பிக்கை
 ஜி- 23 குழு  தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் செயற்குழு கூட்டத்தில் பேசியபோது, ‘‘சோனியா காந்தியின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவருடைய தலைமையை பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை,’’ என்றார்.

தலைமை ஏற்பது பற்றிபரிசீலிக்கிறேன்- ராகுல்
செயற்குழு கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ‘காங்கிரசுக்கு  ராகுல் காந்தி தலைமையேற்று, கட்சியை வழிநடத்த வேண்டும்,’ என்று தீர்மானம் கொண்டு வந்தார். அதை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், தலைவர்களும் ஆமோதித்தனர். கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த ராகுல், ‘கட்சிக்கு தலைமை ஏற்பது பற்றிய கோரிக்கையை பரிசீலித்து முடிவு செய்கிறேன்,’’ என்றார்.

அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா இனி வெகுகாலத்திற்கு ஜனநாயக நாடாக கருதப்படாது. இப்போதே, தனிநபர் ஒருவரின் கையில் அதிகாரம் குவிக்கப்பட்ட ‘தேர்தல் ஏதேச்சதிகாரம்’ என முத்திரை குத்தப்பட்டு விட்டது. நாடாளுமன்றம் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், தீர்ப்பாயங்களில் காலிபணியிடங்கள் நிரப்பாமல், நீதித்துறை நலிவடைந்துள்ளது. மோடி அரசில், அனைவருக்கும் சுதந்திரம், நீதி ஆகியவை வீண் நம்பிக்கையாக மாறி உள்ளது.

இந்த நாட்டை, போலீஸ் நாடாக மாற்றுவதற்கான ஒவ்வொரு மோசமான முயற்சியையும் காங்கிரஸ் எதிர்க்கும். நாட்டின் மதிப்பை பாதுகாக்கவும், மக்களின் எதிர்கால பிரச்னைகளை தடுப்பதற்கும், மோடி அரசாங்கத்தை உறுதியாக எதிர்க்க அனைத்து ஜனநாயக கட்சிகளும், சக்திகளும் கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர், மாநில தலைவர் தேர்தல் தேதிகள் அறிவிப்பு
செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அமைப்பு தேர்தல் தேதிகளை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:
* கட்சியின் கீழ் மட்டம் முதல் அமைப்பு தேர்தல் நடத்தப்படும். இதன் முதல் கட்டமாக, வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரையில் நாடு முழுவதும் மாபெரும் அளவில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.
* மாநில காங்கிரஸ் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாநில காங்கிரசில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கான தேர்தல், 2022ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரையில் நடைபெறும்.
* அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும்.
* காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், இதர அகில இந்திய காங்கிரஸ் அமைப்புகளுக்கான உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்,’’ என்றார்.

தலைவர் தேர்தல் தள்ளி போனது ஏன்?
‘காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடந்த ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா 2வது அலையின் காரணமாக, இதை காலவரையின்றி ஒத்திவைப்பது என்று கடந்த மே 10ம் தேதி காணொலியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது,’’ என்று தனது பேச்சில் சோனியா தெரிவித்தார்.

Tags : Sonia , Party leader, dissident, leader, Sonia, condemnation, Congress
× RELATED நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப...