×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என கூறபடுகிறது.

புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். 18-ந் தேதி வடக்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19-ந் தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் 20-ந் தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், மற்ற வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பொழிவு ஏற்படும். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதேபோல தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா- லட்சத்தீவு கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரி-7 செ.மீ., நாகர்கோவில், கன்னியாகுமரி, ஜம்புகுட்டப்பட்டி, சோழவரம்- தலா 6 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், கொட்டாரம்- தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

Tags : Tamil ,Chennai Meteorological Center , Heavy rains will continue for the next 2 days in Tamil Nadu due to atmospheric circulation: Chennai Meteorological Center
× RELATED தமிழ்நாட்டில் பரவலாக அடுத்த 2...