பிஏபி பாசன வாய்க்காலில் சாய கழிவுநீர்?: விவசாயிகள் அதிர்ச்சி

காங்கயம்: திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணை மூலம் செயல்படுத்தப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பாசன நிலங்கள் பயன்பெற்று வருகிறது. தற்போது 4ம் மண்டலம் 2வது சுற்றுக்கு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் கிளை கால்வாயில் 125 கன அடி வீதம் தண்ணீர் வெள்ளகோவில் பகுதியில் உள்ள 48 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2 நட்களுக்கு முன் காங்கயம்-திருப்பூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பி.ஏ.பி வாய்க்காலில் பாசன நீரானது நிறம் மாறி சிவப்பு கலரில் வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பாசன விவசாயிகள் பார்த்தபோது, தண்ணீரானது சிவப்பு கலரில் சாய நீர் போல பாசனத்துக்கு வந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் நீரை மாதிரிக்காக பாட்டிலில் சேகரித்து கொண்டு வெள்ளக்கோவில் கிளை வாய்க்கால் தொடங்கும் பூஜ்ஜிய பகுதி வரை சென்று பார்த்தனர். ஆனால் பாசன நீர் எதனால் நிறம் மாறி வந்தது என கண்டறிய முடியவில்லை. தொடர்ந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக சிவப்பு நிறத்தில் ஓடிய பாசன நீரால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.  இது குறித்து பாசன விவசாயிகள் கூறுகையில், ‘‘ஏதேனும் நிறுவனத்தில் இருந்து சாய கழிவு நீரையோ அல்லது எண்ணெய் ஆலை கழிவுகளையோ திறந்து பாசன நீரில் வேண்டுமென்றே திறந்து விடப்பட்டு இருக்கலாம்.

இதனால் ஏராளமான பாசன நிலங்கள் பாழ்படும் நிலை ஏற்படும். குடிநீர் தன்மை மாறும் மேலும் கால்நடைகள் நோய் பாதிப்புக்கு உள்ளாகும்.

ஆனால் பொதுபணித்துறை அதிகாரிகள் இது குறித்து கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். சாய கழிவுநீரை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் பிஏபி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கோபியிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘இது குறித்து மாசு கட்டுபாடு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: