பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன விடுதிகளையும் திறக்க அனுமதி வேண்டும்: மாணவ, மாணவிகள் வேண்டுகோள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கல்வி ஆண்டில் விடுதிகளில் சேரும் மாணவ, மாணவிகள் விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் மொத்தம் 84விடுதிகள் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளிலும், கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகளிலும் தங்கி படித்து வருகின்றனர்.ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் கொரோனா பாதிப்பால் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டன. வழக்கமாக கல்வி ஆண்டிற்கு ஜூலை மாதத்தில் விடுதியில் தங்குவதற்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த கல்வி ஆண்டிற்கான சம்பந்தப்பட்ட விடுதிகளில் தங்குவதற்கான விண்ணப்பங்களை பள்ளிகள் சார்பில் மாணவ, மாணவிகளிடம் வழங்கி தேர்வு செய்யும் பணியும் முடிந்து விட்டது. செப்.1 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.விடுதிகளில் தங்குவதற்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வருகின்றனர். ஏற்கனவே விடுதிகளில் தங்கியுள்ளவர்களும் பள்ளிக்கு வருகின்றனர். ஆனால், அவர்களை விடுதிக்குள் அனுமதிக்க விடுதி பணியாளர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.இதுகுறித்து விடுதி பணியாளர்கள் கூறியதாவது: கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுவரை விடுதிகளில் தங்க மாணவ, மாணவிகளை அனுமதிக்கலாம் என உத்தரவு வரவில்லை. துறை அதிகாரிகள் அனுமதி இல்லாமல் நாங்கள் எப்படி விடுதியில் தங்க வைக்க முடியும் என்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவ, மாணவிகளை விடுதியில் அனுமதிக்கவும், விடுதிகளை முன்பு போல் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

More
>