முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார் சசிகலா

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்றடைந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முதன்முறையாக சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களிலும் சசிகலா மரியாதை செலுத்தினார். சசிகலா வருகையையொட்டி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 2 வருடம் சிறை சென்ற சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். பின்னர் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார். இச்செயல் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் சசிகலா ஈடுபடுவார் என எதிர்பார்த்திருந்த அவரின் ஆதரவாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. அதிமுக கட்சித் தொண்டர்களிடம் செல்போனில் சசிகலா பேசிய ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகின பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை மீட்டெடுப்பதில் தான் ஈடுபடுவேன் எனத் தொடர்ந்து சசிகலா கூறிவந்தார். அப்படி, சசிகலாவிடம் பேசிவந்த அதிமுக நிர்வாகிகளை அக்கட்சித் தலைமை உடனடியாக நீக்கி நடவடிக்கை எடுத்து வந்தது. மேலும் தற்போது நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சி பெறவில்லை. எனவே அதிமுகவின் பொன்விழா ஆண்டு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த தன் இல்லத்திலிருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் புறப்பட்டு மெரினா சென்றார்.

வழிநெடுக அவருடைய ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மெரினாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களிலும் அவருடைய ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதியது. சிறை செல்லும் முன்பு 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று சசிகலா சபதம் செய்தார். இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று முதல் முறையாகச் சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா மரியாதை செலுத்தினார்.

Related Stories: