மயிலாடுதுறை, கொள்ளிடத்தில் மழை பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை

கொள்ளிடம்: கொள்ளிடம், மயிலாடுதுறையில் பல ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மழைநீர் நெற்பயிரை மூழ்கடித்துள்ளது. கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்திருந்தனர்.ஆனால் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக விதைப்பு செய்து ஒருமாதமே ஆன நேரடி மற்றும் சம்பா நெற்பயிர் மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் தற்போது வேதனையில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து குன்னம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நரசிம்மன் கூறுகையில், குன்னம் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்துள்ளனர்.

தற்போது கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஒரு மாதமே ஆன நெற்பயிர் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதற்கு காரணம் இக்கிராம பகுதியில் முக்கியமான பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் அழிஞ்சியாறு மற்றும் ஒட்டன் வாய்க்கால் ஆகிய இரண்டு வாய்க்கால்களும் குன்னம் கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர் வாரப்படாமல் ஆழப்படுத்த படாமலும் உள்ளதால் இந்த வாய்க்கால்களில் புதர்கள் மண்டி வாய்க்கால் தூர்ந்து போய் கிடக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்த வாய்க்கால்களை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த வாய்க்கால்களை தூர்வாரி இருந்தால் குன்னம கிராமத்தில் வயல்களில் தேங்கும் அதிகப்படியான மழை நீர் எளிதில் வெளியேறி குன்னம் கிராமத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் சென்று கலந்துவிடும். அழிஞ்சிஆறு மூலமாக அதிகப்படியான தண்ணீர் எளிதில் சென்று ஆற்றில் வடிந்துவிடும். தற்போது மழையின் காரணமாக வாய்க்கால்களில் அதிக தண்ணீர் மேலும் அதிக நீர் வரத்து இருந்து வருகிறது. இதனால் தண்ணீர் வடிய முடியாமல் சம்பா நெற்பயிர் மூழ்கி கிடக்கிறது.

கடந்த மூன்று நாட்களாக பயிர் தண்ணீருக்குள்ளேயே இருந்து வருகிறது. இதனால் இளம் பயிர் அழுகிவிட்டது. இனி மறுமுறை தான் பயிர் செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் செலவு செய்து நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்து தற்போது பயனில்லாமல் போய்விட்டது.

எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மீண்டும் மறுமுறை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்ய அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும். நெல் விதை மற்றும் குறுவை தொகுப்பு உரம் 100 சத மானியத்தில் வழங்கியதுபோல உரங்களும் உடனடியாக நிவாரணமாக வழங்க வேண்டும். என்றார்.மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை அருகே பாண்டூர், பொன்னூர், மகாராஜபுரம், அருள்மொழிதேவன், கொற்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நடவு செய்துள்ள 15 நாள் தாளடி பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது.

திருமங்கலத்திலிருந்து கங்கணம்புத்தூர் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் செல்லும் எல்லை வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் பெருமழைக்காலங்களில் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவரும் இப்பகுதி விவசாயிகள் சிலர் இந்த ஆண்டு ஒன்றிணைந்து தாங்களே ரூ.1 லட்சம் வரை செலவுசெய்து தங்கள் பகுதியில் எல்லை வாய்க்காலை தூர்வாரி உள்ளனர்.இருப்பினும், பல்வேறு கிராமங்களில் தூர்வாரப்படாத நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உடனடியாக எல்லை வாய்க்காலை தூர்வாரி அழுகத் தொடங்கியுள்ள தங்கள் பயிர்களை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>