கடலாடியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவில் மின்கம்பம்

சாயல்குடி: கடலாடி நீதிமன்றம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே மின்கம்பம், தாழ்வாக செல்லும் வயர்கள் இருப்பதால் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கடலாடியிலிருந்து எம்.கரிசல்குளம் வழியாக பிள்ளையார்குளம் செல்ல பிரதான சாலை உள்ளது. இதனை கடலாடி, மேலக்கடலாடி, எம்.கரிசல்குளம், ஒச்சதேவன்கோட்டை, பிள்ளையார்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடலாடி அரசு நடுநிலைப்பள்ளி, நீதிமன்றம், கோயில்கள் இச்சாலை அருகே அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் பத்திரகாளியம்மன் கோயில் முன்புறம் செல்லும் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று உள்ளது. பலமுறை இப்பகுதியினர் கடலாடி உதவி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும், மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைப்பதற்கு மின்சார வாரியம் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு பாரத பிரதம மந்திரி கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடலாடியிலிருந்து எம். கரிசல்குளம் வழியாக பிள்ளையார்குளத்திற்கு புதியசாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை நடுவில் இருந்த மின்கம்பத்தை அகற்றாமல்  சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்து விட்டது.மேலும் இச்சாலையோரம் உள்ள காமராஜர் சிலை முதல் அரசு நீதிமன்றம் வரையில் மின்வயர்கள் தாழ்வாக செல்கிறது. இச்சாலையில் வாகனங்கள் செல்லும் போது, வயரில் உரசி வயர்கள் அறுந்து வருகிறது. இதனால் மின்விபத்து அபாயமும் உள்ளது. சாலையில் இருக்கும் மின்கம்பம், தாழ்வாக செல்லும் மின்வயர் ஆகியவற்றால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படு வருவதாக பொதுமக்கள்  கூறுகின்றனர். எனவே மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும், மின்வயர்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>