பாகம்பிரியாள் கோயிலில் இடிந்து விழும் நிலையில் பக்தர்கள் தங்கும் விடுதி

திருவாடானை: திருவாடனை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாகம்பிரியாள் கோயில் தங்கும் விடுதியை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில்  சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து தங்கி செல்கின்றனர். இக்கோயிலை பொருத்தமட்டில் இரவு தங்கி சாமி கும்பிடுவது சிறப்பு என கருதப்படுவதால் பக்தர்கள் தங்குகின்றனர். இதற்காக இரண்டு திறந்தவெளி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பாக தங்க விரும்பும் பக்தர்களுக்கு எட்டு தங்கும் அறைகளும், 2 தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளன. இதில் 2 தங்கும் விடுதிகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

இதனால் வாடகைக்கு விடாமல் பூட்டி வைத்துள்ளனர்.  இதுகுறித்து திருவெற்றியூர் கிராம பொதுமக்கள் கூறுகையில், `` பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து தங்குகின்றனர். வியாழன், வெள்ளிக்கிழமையில் அரசு சிறப்பு பஸ்சும் இயக்கப்படுகிறது. அந்த அளவிற்கு பக்தர்கள் இங்கு வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக தங்க போதிய அறைகள் இல்லை. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரண்டு விடுதிகளும் இடிந்துபோய் உள்ளது. இதனருகே குழந்தைகள் விளையாடுகின்றனர். எனவே, இவற்றை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக விடுதி கட்ட தேவஸ்தான நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

More
>