×

டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வரவிருக்கின்ற பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று தலைமைப் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இன்று முக்கிய முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. காங்கிரஸுக்கு புதிய தலைமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குலாம் நபி ஆசாத், கபில் சிபல், அபிஷே மனு சிங்வி உள்ளிட்ட 23 பேர் அடங்கிய ஜி23 யின் கோரிக்கை இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

அடுத்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக தான் ஆட்சி நடத்தி வருகிறது. பஞ்சாபில் உட்கட்சிப் பூசல் மோதல் இன்னும் முடிவடையவில்லை. உத்தரப் பிரதேசத் தேர்தல் என்பது அடுத்து வரும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோடமாகவே பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஐந்து மாநிலத் தேர்தல் என்பது காங்கிரஸ் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தைக் கொடுத்திருக்கிறது என கூறப்படுகிறது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 52 காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர். திக்விஜய சிங் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் உட்பட ஐந்து தலைவர்கள் இன்று கூட்டத்தில் பங்கேற்கவில்லை.


Tags : Congress ,Working Committee ,Delhi ,Sonia Gandhi , The Congress Working Committee meeting started in Delhi under the chairmanship of Sonia Gandhi
× RELATED உணவு பொருட்கள் விலை ஏற்றத்தை...