சூப்பர் மார்க்கெட்டில் ரூ.5 லட்சம் மோசடி: மேலாளர் உட்பட 3 பேர் கைது

ஆவடி: அம்பத்தூர், சோழம்பேடு மெயின் ரோட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதில் வரவு- செலவு கணக்குகளை சமீபத்தில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சூப்பர் மார்க்கெட்டில் இருந்த வைப்பு தொகை ரூ.1 லட்சமும், போலி ரசீது மூலம் ரூ.4 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.  இதுகுறித்து கம்பெனியின் பொது மேலாளர் ஜான் ஆண்டனி என்பவர் சென்னை, இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இணை கமிஷனர் ராஜேஸ்வரி புகாரை அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, உறைகிணறு கிராமத்தை சேர்ந்த பால்குமார் (31), சூப்பர் மார்க்கெட் மேலாளர் மற்றும் திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, நாதன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (24), தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, கருமன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (21) ஆகிய ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தனிப்படை போலீசார் 3 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>