×

உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் ஆத்திரம் கார் டிரைவருக்கு சரமாரி கத்தி குத்து

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஊராட்சி கூத்தவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருளானந்தம் (39). இவரது மனைவி சலினா மேரி (33). சலினா மேரியின் சகோதரர் ஜோசப் (37), அதே பகுதியை சேர்ந்தவர்கள் பிரான்சிஸ் (30), சந்தோஷ் பெர்ணான்டஸ் (29) ஆகிய 3 பேரும்  நெருங்கிய நண்பர்கள். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பையனூர் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தலின்போது, சலினா மேரியின் சகோதரர் ஜோசப், நண்பர் பிரான்சிஸ், சந்தோஷ் பெர்ணான்டஸ் ஆகியோர் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தபோது, வாக்களிக்க வராமல் கார் ஓட்ட சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜோசப், நேற்று முன்தினம் நள்ளிரவு பிரான்சிஸ் வீட்டுக்கு சென்றார். அங்கு, எதற்காக நீ வாக்களிக்க வரவில்லை என கேட்டு தகராறு செய்தார். மேலும், பிரான்சிசை சரமாரியாக தாக்கினார். இதில், பிரான்சிஸ் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் சந்தோஷ் பெர்ணான்டஸ், அங்கு ஓடிவந்து ஜோசப்பை தட்டிக் கேட்டார். அதற்கு, எனது சகோதரி தோல்விக்கு பிரான்சிஸ்தான் காரணம் என கூறி, மீண்டும் அவரை தாக்கினார். இதையடுத்து சந்தோஷ் பெர்ணான்டஸ், 2 பேரையும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி வலியுறுத்தியாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஜோசப், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சந்தோஷ் பெர்ணான்டசை சரமாரியாக குத்தினார். இதில், சந்தோஷ் பெர்ணான்டஸின் வயிற்றில் இருந்து குடல் வெளியே சரிந்து விழுந்தது. அவர், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து போலீசார், ஜோசப்பை பிடித்து விசாரித்தனர். அதில், நான் தான் சந்தோஷ் பெர்ணான்டஸை கத்தியால் குத்தினேன் என அவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை  கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், ஜோசப்புக்கு பக்கபலமாக இருந்த அவரது அண்ணன் பெர்னாடு (42),  அருளானந்தம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். மாமல்லபுரம் அருகே உள்ளாட்சி தேர்தல் தோல்வி சம்பந்தமாக நள்ளிரவில் நடந்த கத்தி குத்து சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Local elections, defeat, car driver, knife punching
× RELATED திரிபுரா உள்ளாட்சி தேர்தல் பாஜ அமோகம்