காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கோயில்கள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி  அளிக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 1000க்கும் மேற்பட்ட கோயில்கள் திறக்கப்பட்டன. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சி காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், அத்தி வரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள், கச்சபேஸ்வரர், குமரகோட்டம் முருகன், கைலாசநாதர், அஷ்டபுஜம் பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள், உலகளந்த பெருமாள், நகரீஸ்வரர், மச்சேச பெருமாள், திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் என மாவட்டம் முழுவதும் சுமார் 1195 கோயில்கள் உள்ளன.

இந்தக் கோயில்கள் அனைத்தும் அரசின் கொரோனா விதிமுறைகளின் படி  வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழக அரசு வாரத்தில் 7 நாட்களும் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் விஜயதசமியையொட்டி கோயில்கள் வழங்கம்போல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். அனைத்து நாட்களிலும் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு கோயில் நகரமான காஞ்சிபுரம் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களால் களைகட்டியது.

Related Stories:

More
>