9 கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்பு தூத்துக்குடியில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: கூட்டாளி கைது இருவர் தப்பினர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 9 கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டார். இருவர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் திரவியபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் துரைமுருகன் (39). இவர் மீது 9 கொலை வழக்குகள் உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பூ வியாபாரி முருகேசன் மகன் ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டு பாளையில் புதைக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தூத்துக்குடி எஸ்பி தனிப்பிரிவு போலீஸ் தனிப்படையினர் இவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடியை அடுத்த முள்ளக்காடு, கோவளம் கடற்கரை பகுதியில் துரைமுருகன் பதுங்கியிருப்பதாக நேற்று மாலை தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ ராஜபிரபு தலைமையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர். அங்கு காட்டுப்பகுதியில் துரைமுருகன், அவரது கூட்டாளிகளான திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அயன்புரம், நெசவாளர் காலனியை சேர்ந்த பிரபல ரவுடி ஆரோக்கியராஜ், தூத்துக்குடி விஸ்வா, முள்ளக்காடு ராஜா ஆகியோர் இருந்துள்ளனர்.அவர்களை தனிப்படையினர் மாலை 3 மணியளவில் மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் தப்பியோட முயன்ற அவர்கள், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்டினர்.

இதில் எஸ்ஐ ராஜபிரபு, ஏட்டு டேவிட்ராஜன் ஆகியோருக்கு இடது கைகளில் வெட்டு விழுந்துள்ளது. இதனால் எஸ்ஐ ராஜபிரபு, முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பின்னர் தற்காப்பிற்காக துரைமுருகனை நோக்கி 3 ரவுண்டு சுட்டுள்ளார். இதில் ஒரு குண்டு துரைமுருகன் வலது தொண்டை பகுதியை துளைத்துள்ளது. மேலும் 2 குண்டுகள் அவரது வயிற்று பகுதியை துளைத்தது. இதனால் சம்பவ இடத்திலேயே துரைமுருகன் பலியானார். தப்பியோடிய ஆரோக்கியராஜை தனிப்படையினர் விரட்டிச் சென்று மடக்கி பிடித்துள்ளனர். ராஜா மற்றும் விஸ்வாவை தேடி வருகின்றனர்.

தகலவறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

துரைமுருகன் உடல் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரிவாளால்  வட்டில் காயமடைந்த எஸ்ஐ ராஜ பிரபு, ஏட்டு டேவிட்ராஜன் ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை  தென்மண்டல ஐஜி அன்பு,  நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

3 முறை குண்டாசில் கைது

தூத்துக்குடியில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி துரைமுருகனுக்கு திருமணமாகி ரேகா(31) என்ற மனைவி உள்ளார். துரைமுருகனுடன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள், 3 சகோதரிகள். இவர்களில் ஜெயராமன் என்பவர் கொலை செய்யப்பட்டு விட்டார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசில் குற்றவாளிகள் பட்டியலில் துரைமுருகன் பெயர் உள்ளது. கடந்த 2001ல் முத்தையாபுரம் பகுதியில் உறவினர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதானதன் மூலம் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றார்.

தட்டப்பாறை, மதுரை ஒத்தக்கடை, திருவண்ணாமலை மாவட்டம் வனப்புறம் போலீசில் தலா ஒரு கொலை வழக்கும், தூத்துக்குடி தென்பாகம் போலீசில் 3 கொலை வழக்குகள், இதுதவிர ராமநாதபுரம், சென்னை, கடந்த வாரம் பாவூர்சத்திரம் வாலிபர் கொலை வழக்கும் உள்ளன. பல திருட்டு, அடிதடி வழக்குகள் என பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 27 வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் தடுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பாவூர்சத்திரத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் இருந்த துரைமுருகன், கடந்த செப்டம்பர் 3ம் தேதிதான் வெளியே வந்துள்ளார்.

சிக்கியது எப்படி?

ரவுடி துரைமுருகனின் சகோதரி பாவூர்சத்திரத்தில் வசிக்கிறார். இங்குள்ள கோயில் கொடை விழாவிற்கு சென்ற போதுதான் நவம்பர் மாதம் திருணம் நடைபெறவிருந்த புதுமாப்பிள்ளை ஜெகதீஷ் மற்றும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெகதீசை கடத்தி கொலை செய்துவிட்டு உடலை புதைக்க பாளையங்கோட்டை அருகே டக்கரம்மாள்புரத்தில் உள்ள நண்பர் ஜோயல் உதவியை நாடியுள்ளார். அவர் போலீசில் சிக்கிக் கொண்டதால் அவரிடம் இருந்து துரைமுருகனின் செல்போன் எண்ணை போலீசார் தெரிந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர் புதிய நம்பரை பயன்படுத்தி உள்ளார்.

துரைமுருகனின் தனது அண்ணன் மகன் சுதந்திரராஜிடம் உதவி கேட்டு துரைமுருகன், தூத்துக்குடிக்கு வந்துள்ளார். இதனிடையே கொலை வழக்குகளில் தேடப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டாக தலைமறைவாக இருந்த சுதந்திரராஜையும் டவுன் தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்த போதுதான் துரைமுருகன், தூத்துக்குடி புறநகர் பகுதியில் சுற்றித் திரிவது தனிப்படையினருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்தே துரைமுருகனின் புதிய செல்போன் எண் காட்டிய டவரை வைத்து அவரை சுற்றி வளைத்துள்ளனர்.

Related Stories: