மசினகுடியில் 21 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின் சிக்கியது ஆட்கொல்லி புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது: பொதுமக்கள் நிம்மதி

கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள மசினகுடி சோதனைச்சாவடி பகுதியில் 21 நாட்களுக்கு பிறகு 4 பேரை கொன்று அச்சுறுத்தி வந்த ஆட்கொல்லி புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வருடமாக பொதுமக்களையும், தோட்ட தொழிலாளர்களை புலி ஒன்று அச்சுறுத்தி வந்தது. கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கி கடந்த செப்டம்பர் 24ம் தேதிவரை மசினகுடி பகுதியில் ஆதிவாசி பெண் உட்பட 3 பேரை கொன்றது. ஆட்கொல்லி புலியை பிடிக்க பல இடங்களில் கூண்டு வைத்தும் அதில் அது சிக்கவில்லை. பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து

இதனையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் உறுதியளித்தனர். அதற்கான நடவடிக்கைகளிலும் அவர்கள் கடந்த செப்டம்பர் 25ம் தேதி இறங்கினர்.  கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இருந்து புலியை பிடிக்கும் பணிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற வனத்துறை குழுவினரும் இப்பணியில் இணைக்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் 27, 28 தேதிகளில் மேபீல்டு எஸ்டேட் பகுதியில் வனத்துறையிடம் பலமுறை புலி தென்பட்டும் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 1ம் தேதி மேலும் ஒருவரை தாக்கி கொன்றது. இதனால் மசினகுடி பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருந்தது.

புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு கிளம்பியதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. புலியின் நடமாட்டம் கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. வனத்துறையினரும், அதிரடிப்படையினரும் மசினகுடி வனப்பகுதியில் புலியை தொடர்ந்து தேடி வந்தனர். பல முறை கண்காணிப்பு கேமராவில் புலியின் உருவம் பதிவானது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தெப்பக்காடு-மசினகுடி சாலையில் நடமாடியுள்ளது. நேற்று காலை வனத்துறையினர் மசினகுடி சோதனைச்சாவடியை ஒட்டிய வனப்பகுதியில் புலியை தேடும் பணியில் ஈடு்பட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத நிலையில் வனத்துறையினருக்கு முன்பே புலி சாலையை கடந்து மாயார் வனப்பகுதிக்குள் சென்றது.

இதையடுத்து தொடர்ச்சியாக கண்காணித்த வனத்துறையினர் 2 கும்கி யானைகள் உதவியுடன் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினர். இந்த பணியில் தமிழக வனத்துறை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர், 4 கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.இந்த நிலையில் நேற்று புலி பதுங்கிய இடம் தெரியவந்தது. இதையடுத்து மதியம் 2 மணியளவில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதன் காரணமாக புலி மயக்கமடைந்து புதர்கள் நடுவே விழுந்தது.

இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த இடத்துக்கு சென்றனர். புலியை கவனமாக பிடித்தனர். புலி மயக்கமடைந்து கிடந்த வனப்பகுதிக்கு லாரி மூலம் கூண்டு கொண்டு வரப்பட்டது. அந்த கூண்டில் புலி அடைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ அங்கு வந்தனர். அவர்கள் புலியை பார்வையிட்டனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலி டி23 புலிதான் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து புலி அடைக்கப்பட்ட கூண்டுடன் லாரி வனத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. கூடலூர், மசினகுடி, தேவன் எஸ்டேட் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த புலி 21 நாட்களுக்கு பிறகு பிடிக்கபட்டதால் அவர்கள் நிம்மதியடைந்தனர்.

வனக்காவலர் காயம்: கூடலூர், மசினகுடி பகுதியில் 4 பேரை கொன்று அச்சுறுத்தி வந்த புலி நேற்று பிடிக்கப்பட்டது. வனப்பகுதியில் புலிக்கு மயக்க ஊசி போடும் நடவடிக்கையின்போது வனக்காவலர் மணிகண்டன் என்பவர்  தடுக்கி விழுந்தார். இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மைசூர் வனவிலங்கு புத்துணர்வு மையத்தில் சிகி்ச்சை

வனத்துறை  அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹீ, தலைமை வன உயிரின  பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியது:  பிடிபட்டுள்ளது 13 வயதுள்ள ஆண் புலியாகும். கும்கி யானையின் மீது இருந்து  கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தியதையடுத்து சுமார் 100 மீட்டர்  தூரம் புலி ஓடி புதர் பகுதியில் மயங்கியது. அந்த புலியை வனத்துறையினர்  ஆய்வு செய்தனர். அதன் உடலில் காயங்கள் காணப்பட்டது.  புலி நாள்  ஒன்றிற்கு சராசரியாக 18 கிமீ தூரம் அலைந்துள்ளது. போதிய உணவு, ஒய்வு  இல்லாததால் மிகவும் சோர்வாக இருந்ததால் குளுக்கோஸ் ஏற்றி அங்கேயே முதலுதவி  சிகிச்சை அளிக்கப்பட்டது.

புலிக்கு உடனடியாக தேவையான சிகிச்சை அளித்து அதன்  உயிரை பாதுகாக்க வேண்டும். மேலும் 3 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க  வேண்டியுள்ளதால் அருகில்  மைசூரில் உள்ள வனவிலங்கு புத்துணர்வு மையத்திற்கு  புலி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு புலிக்கு புத்துணர்வு  சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு  கொண்டு செல்லப்படும். ஆட்கொல்லி புலியை இதுவரை சுட்டுக்கொன்ற  சம்பவங்கள்தான் நடைபெற்றுள்ளன. ஆனால் நீலகிரியில் இப்போதுதான் முதல்  முறையாக ஆட்கொல்லி புலி மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: