ஆதம்பாக்கத்தில் பரபரப்பு காதலி வீட்டில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை: 8 பேர் போலீசில் சரண்

ஆலந்தூர்: கோவிலம்பாக்கம் வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் நாகூர் மீரான் (29).இவர் மீது ஆதம்பாக்கம், சூளைமேடு, கே.கே.நகர், குன்றத்தூர், பூந்தமல்லி, கொரட்டூர், வேலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 2 கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று முன்தினம் மாலை தனது காதலி லோகேஷ்வரியை பார்க்க ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகருக்கு வந்திருந்தார். இதை நோட்டமிட்ட எதிரிகள் நாகூர் மீரானை கொலை செய்ய அங்கு திரண்டனர். இதுபற்றி அறிந்த நாகூர் மீரான், காதலி வீட்டிற்குள் பதுங்கியுள்ளார்.

அப்போது, அந்த வீட்டிற்குள் புகுந்த எதிரிகள், மீரானை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவலறிந்த ஆதம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, நாகூர் மீரானின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையில் போட்டி மற்றும் யார் பெரிய ரவுடி என்ற போட்டியில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் (27), தனது கூட்டாளிகள் 7 பேருடன் சேர்ந்து நாகூர் மீரானை கொலை செய்தது தெரிந்தது. அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், ராபின் (27) மற்றும் வேளச்சேரி சசி நகரை சேர்ந்த கார்த்திக் (எ) இருளா கார்த்திக் (27), ஆதம்பாக்கத்தை சேர்ந்த பிரபா (23), காணிக்கை ராஜ் (23), விமல் என்ற கருங்குழி (23), சீனன் (35), பவுல் (22), சாமுவேல் (எ) சாம் ஆகிய 8 பேர் நேற்று ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே, நாகூர் மீரானின் கூட்டாளிகள், அம்பேத்கர் நகரில் உள்ள ராபினின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.

பழிக்குப் பழியாக இருவருக்கு வெட்டு

நாகூர் மீரான் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது கூட்டாளிகள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று ஜமீன் பல்லாவரம், சஞ்சய்காந்தி நகர், கலைஞர் தெருவில் உள்ள ராபினின் உறவினரான அந்தோணி (50) வீட்டிற்கு வந்து, அந்தோணி மற்றும் அவரது உறவினர் சகாயம் ஆகியோரை சராசரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அந்த வீட்டில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Related Stories: