116 நாடுகளில் பின்தங்கியது இந்தியா பட்டினி குறியீட்டில் 101வது இடம்: பாக்., வங்கதேசம், நேபாளத்தை விட மோசம்

புதுடெல்லி: உலகளாவிய பட்டினி குறியீட்டில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்திற்கு சென்றுள்ளது. அயர்லாந்தின் தொண்டு நிறுவனமான கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியின் ஹங்கர் ஹில்ப் ஆகியவை இணைந்து சர்வதேச நாடுகளின் பட்டினிக் குறியீடு குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல், ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் உயரத்திற்கு தகுந்த எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு தகுந்த உயரம் இல்லாமல் இருத்தல் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்படுகிறது.

மொத்தமுள்ள 116 நாடுகளில், கடந்த 2020ம் ஆண்டில் இந்தியா 94 வது இடத்தை பெற்றிருந்தது. தற்போது 7 இடங்கள் பின்தங்கி 101வது இடத்துக்கு ெசன்றுள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் இந்தியாவின் பட்டினி குறியீடு புள்ளிகள் 38.8 ஆக இருந்த நிலையில், தற்போது 27.5 ஆக சரிந்துள்ளது. உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமை 17.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது உலகிலேயே குறைவான சதவீதமாகும். இப்பட்டியலில் இந்தியாவுக்கு பிறகு பெரும்பாலும் ஆப்ரிக்காவை சேர்ந்த பஞ்சத்தில் அடிபட்ட நாடுகள் மட்டுமே உள்ளன.

பெரும் வளர்ச்சி காணாத நமது அண்டை நாடுகள் இந்தியாவை விட முன்னேறிய நிலையில் உள்ளன. பாகிஸ்தான் 92 வது இடத்திலும், மியான்மர் 71வது இடத்தையும், நேபாளம் மற்றும் வங்கதேசம் 76வது இடத்தையும் பகிர்ந்து கொண்டு உள்ளன. இதில் சீனா, குவைத் போன்ற நாடுகள் முன்னணி இடங்களில் உள்ளன.

வறுமையை ஒழிச்சிட்டீங்க...

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், தனது டிவிட்டர் பதிவில், ‘‘வறுமை, பட்டினி, இந்தியாவை சர்வதேச வல்லரசாக்குதல், நமது டிஜிட்டல் பொருளாதாரம் என பலவற்றையும் ஒழித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் பிரதமர் மோடி ஜி’’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் விவகாரம் மூலமாக லக்கிம்பூர் வன்முறையை திசை திருப்ப முயற்சிக்கப்படுவதாகவும் கபில் சிபல் குற்றம்சாட்டி உள்ளார்.

Related Stories: