ஊரக உள்ளாட்சி களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன் மாநகராட்சி, நகராட்சி தேர்தலிலும் உதிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக் களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன், விரைவில் நடைபெறவிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் களத்திலும் உதித்திட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டு மக்கள் தங்களின் நலன் காக்கும் நம்பிக்கை இயக்கமான திமுக மீது பாசமும் பற்றும் கொண்டு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாடே வியக்கும் மகத்தான வெற்றியையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய பெருமிதமிக்க வெற்றியையும் வழங்கியதைப் போலவே, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் வரலாறு போற்றும் மிகப் பெரும் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில், மாவட்ட எல்லைகள் அவை சார்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கான எல்லைகளை வரையறை செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆக்கப்பணிகள் திமுக அரசால் மேற்கொள்ளப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்தால் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

9 மாவட்டங்களுடன், மேலும் சில மாவட்டங்களில் இடைத்தேர்தல் என மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 23 ஆயிரத்து 998 பொறுப்புகளுக்கான இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுகிற பணி, அக்டோபர் 12ம் நாள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு வழங்கியிருப்பது உறுதியானது. 140 மாவட்ட உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிகளில் 138 இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பொறுப்பினையும் திமுக அணியே பெறுகின்ற வாய்ப்பினை மக்கள் வழங்கியுள்ளனர். அது போலவே, 1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களிலும் 1000 இடங்களுக்கும் கூடுதலாக திமுக அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொறுப்புகளில் 73 பொறுப்புகள் திமுக அணியின் வசமாகியுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற பகுதிகளிலும் கழகம் வெற்றியைக் குவித்துள்ளது.

வெற்றிபெற்ற திமுகவினர் தங்களின் வெற்றிச் சான்றிதழை என்னிடம் காண்பித்து, வாழ்த்து பெறுவதற்காக அக்டோபர் 13ம் தேதி அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார்கள். இடைவிடாத பணிகளுக்கிடையிலும், இரண்டு மணி நேரத்தை அவர்களுக்காக முழுமையாக ஒதுக்கி, வெற்றி பெற்றுள்ள திமுகவினரை நேரில் பாராட்டி, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன். உள்ளாட்சி நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாகச் சீரழித்த முந்தைய ஆட்சியாளர்கள் நம் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் புறங்கையால் தள்ளி, திமுகவிற்கு கிட்டத்தட்ட 100 விழுக்காடு வெற்றியைத் தந்திருக்கிறார்கள். திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவரும், மக்களின் நியாயமான கோரிக்கைகைளையும் அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றக் கூடிய மக்கள் பிரதிநிதிகளாக - மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைத்திட, ஊழியம் புரிந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளில் உங்களுக்குக் கிடைத்துள்ள பொறுப்புகளை உணர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றுங்கள்.

மே 7ம் நாள் பொறுப்பேற்ற திமுக அரசு, மக்கள் நலன் காப்பதில் இந்தியாவிலேயே முதன்மையாகக் திகழ்கிறது என்று இந்திய ஊடகங்கள் அனைத்தும் பாராட்டுகின்றன. அந்தப் பாராட்டுப் பத்திரங்கள், பத்திரமாக நிலைத்திடும் வகையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகழவினர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். தூய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தினை வழங்கிட வேண்டும். மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக்கூடிய நிலை உருவாகவே கூடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் நமக்கு எஜமானர்கள். நாம் அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை எந்நாளும் எப்பொழுதும் நெஞ்சில் கொண்டு செயலாற்றிட வாழ்த்துகிறேன். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக் களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன், விரைவில் நடைபெறவிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் களத்திலும் உதித்திட வேண்டும்.

மக்கள் நம் பக்கம், நாம் மக்களின் பக்கம். அதற்கேற்ப நமது செயல்பாடுகள், மக்கள் நலன் காக்கும் வகையில் தொடர்ந்திடும். இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்.

Related Stories: