கட்சியின் பொன்விழா ஆண்டையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் பொன்விழாவை கொண்டாட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் தலையை கழகத்தில் சிறப்புற நடைபெற்றது. எம்.ஜி.ஆர் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் ‘அதிமுக’ என்ற இயக்கத்தைத் தொடங்கியபோது ஏற்பட்ட அரசியல் எழுச்சியும், புத்துணர்ச்சியும் இன்றும் தொடர்வது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுக தொடங்கப்பட்டதன் 50-ம் ஆண்டு விழாவை தமிழ்நாட்டிலும், கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும், பின்வரும் வகைகளில் ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வளர்ச்சிக்காக தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத் துறையினர் உள்ளிட்டோருக்கு இந்த பொன்விழா ஆண்டு முதல், பெரியார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, விளையாட்டு போட்டி ஆகியயற்றை மாநிலம் முழுவதும் நடத்தப்படும். அதிமுகவின் முக்கிய நிகழ்வுகளை ‘மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் குறிப்பேடாக அச்சடித்து வழங்கப்படும்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை’ என பெயர் சூட்டப்படும். பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினரை கௌரவித்து, உதவி செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்க கூட்டங்கள் நடத்தி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்களுக்கு பொன்விழா நினைவு நாணயம்/பதக்கம் வழங்க வேண்டும். உறுப்பினர் பெயர் விவரம் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்குதல் பொற்கிழி அளிக்க வேணே்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவை பற்றியும், அதிமுக பற்றியும் நூல்களை எழுதியுள்ள ஆசிரியர்களை அழைத்து கௌரவிக்கப்படுவார்கள்.

Related Stories: