ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று செல்கிறார் சசிகலா: ஆரவாரமுடன் வரவேற்க ஏற்பாடு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை முடிந்து விடுதலையான 8 மாதங்களுக்கு பிறகு, சசிகலா இன்று முதன்முறையாக ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருக்கிறார். அவரை ஆரவாரமுடன் வரவேற்க ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார். அப்போது, அவர் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். அதன்படி, அமமுகவை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், திடீரென தான் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். சசிகலாவின் இந்த திடீர் மாற்றம் அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுக, அமமுகவை சேர்ந்த தனது ஆதரவாளர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, நான் விரைவில் வருகிறேன். அதிமுக தலைமை சரியில்லை. உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்திருந்தார். தொடர்ந்து சில மாதங்களாக ஆடியோ அரசியல் மட்டுமே சசிகலா செய்துவந்தார். ஆனால், இந்த அறிவிப்பிற்கு பிறகும் சசிகலா தனது ஆதரவாளர்களை சந்திக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்தநிலையில், அதிமுக பொன்விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சசிகலா இன்று காலை 10 மணியளவில் மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்ல இருக்கிறார். சசிகலாவை ஆரவாரத்துடன் வரவேற்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று மெரினாவில் கூட உள்ளதாகவும் கூறப்படுகிறது. காலை 10 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா, முதலில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர், ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை காலை 10 மணியளில் தி.நகரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு செல்கிறார். பின்னர், மதியம் 12 மணியளவில் ராமாவரம் இல்லத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். சிறையில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா 8 மாதங்களுக்கு பிறகு ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: