பொன்னேரி, திருநின்றவூர் உட்பட 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை

சென்னை: தமிழகத்தில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை மானியக்கோரிக்கையின் போது, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021ம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதென கருதப்படுகிறது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகர்ப்புரத்தன்மை, மக்கள் தொகை, மக்கள் அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புறமாக மாறி வருகின்ற இந்த பகுதிகளிலும் இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகின்றன.  அதன்படி, நாகர்கோவில் மாநகராட்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள தெங்கம்புதூர் பேரூராட்சி, ஆளுர் பேரூராட்சி, புத்தேரி ஊராட்சி, திருப்பதி சாரம் ஊராட்சி, பீமநகரி ஊராட்சி, தேரேகால் புதூர் ஊராட்சி, மேல சங்கரன்குழி ஊராட்சி, கணியாகுளம் ஊராட்சி ஆகியவை முழுமையாகவும், தர்மபுரம் ஊராட்சி, ராஜக்கமங்கலம் ஊராட்சி ஆகியவை பகுதியாகவும் இணைப்படுகிறது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி, திருநின்றவூர், கடலூர் மாவட்டம்- திட்டக்குடி, வடலூர், தஞ்சாவூர் மாவட்டம்- அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்- திருச்செந்தூர், கோவை மாவட்டம்- கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, கரூர் மாவட்டம்- பள்ளப்பட்டி, திருப்பூர் மாவட்டம்- திருமுருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகள் நகராட்சிகளாக அமைத்துருவாக்கப்படும். சிவகங்கை மாவட்டம்- மானாமதுரை, திருச்சி மாவட்டம்- முசிறி, இலால்குடி, சேலம் மாவட்டம்- தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய 5 பேரூராட்சிகள் நகராட்சிகளாக அமைத்துருவாக்கப்படும். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு, கரூர் மாவட்டம் புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகள் நகராட்சிகளாக அமைத்துருவாக்கப்படும். கும்பகோணம் மாநகராட்சியை அமைத்துருவாக்கும் பொருட்டு கும்பகோணம் நகராட்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள தராசுராம் முதல்நிலை பேரூராட்சியை கும்பகோணம் நகராட்சியுடன் இணைக்கப்படலாம் என உத்தேச முடிவு மேற்கொண்டு ஆணையிடுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: