நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

சென்னை: நெஞ்சுவலி காரணமாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இவர், கடந்த சில நாட்களாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் உள்ள வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இசிஜி மற்றும் ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டது.

இதில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் லேசான அடைப்பு அவருக்கு இருந்தது தெரியவந்தது. அவருக்கு ரத்த குழாய் அடைப்பை நீக்குவதற்கான ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டு, இரண்டு ஸ்டன்ட் பொருத்தியுள்ளனர். சிகிச்சை நல்ல முறையில் முடிந்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று பிற்பகல் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, அதே மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்து நலம் விசாரித்தார்.

Related Stories: