×

அனைத்து நாட்களிலும் திறக்க அனுமதி.! வழிபாட்டு தலங்களில் மக்கள் திரண்டனர்: கொரோனா கட்டுப்பாடுகளுடன் தரிசனம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் உடனடியாக திறக்கப்பட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களில் மக்கள் திரண்டனர். அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்கு செல்வதைக் கருத்தில் கொண்டு அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதே போன்று, அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், வரும் 1ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம். தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் செயல்படலாம். மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்குபெற அனுமதிக்கப்படுகிறது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்த்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. பண்டிகைக் காலத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அதிகப்படியான பொதுமக்கள் கூடுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று உடனடியாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க நுழைவு வாயிலில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு குறைவான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒருபுறம் பக்தர்கள் உள்ளே செல்லவும், மறுபுறம் வெளியே செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரின் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டிருந்தனர். கோயில்களுக்கு தடுப்பு ஏற்படுத்தி பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா விதிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கபடுகிறதா என்பதை இணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், கோயில்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அதேபோன்று பல மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமைகளில் முதன்முறையாக தனிநபர் இடைவெளியுடன் மசூதிகளில் தொழுகைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ெதாழுகைகளில் கலந்து கொள்வோர் விரிப்புகளை அவர்களே கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் வழிபாட்டு தலங்கள் சுத்தப்படுத்த வேண்டும். வழிகாட்டு தலங்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் வெப்ப பரிசாதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தலை பின்பற்றியே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Allow to open all day.! People gathered at places of worship: vision with corona restrictions
× RELATED நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளும்...