×

பொதுமக்கள் பண்டிகை காலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: பொதுமக்கள் இப்பண்டிகை காலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை  தவிர்க்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வௌியிட்டுள்ள அறிக்கை: இந்த திருவிழா காலத்தில் நம் குடும்பங்கள், வீட்டுக்கு தேவையான மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களான புத்தாடைகள். காய்கறிகள், பழங்கள், இனிப்புகள், பூக்கள், பொறி மற்றும் பிற பூஜை பொருட்களை சாலையோர வியாபாரிகள், காய்கறி மற்றும் பழ சந்தைகள், கடைகள் பல்பொருள் அங்காடிகள். பேரங்காடிகள் போன்றவற்றிலிருந்து வாங்க விரும்புவார்கள். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது. மேலும், கடல் வாழ் உயிரினங்கள் உட்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் மாசுபாட்டை தடுக்கத் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தேநீர் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுத் தாள்களை கட்ட பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தடை செய்ய தமிழக அரசு மக்களின் ஆதரவை நாடுகிறது.

எனவே. பொது மக்கள் இப்பண்டிகை காலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை உபயோகப்படுத்தி பொருட்களை நமது நாடு மற்றும் நாம் வாழும் இந்த பூமி எதிர்கொள்ளும் இந்த மிகப்பெரிய அச்சுறுத்தலை அகற்ற அரசின் நடவடிக்கை மட்டுமல்லாது உங்கள் பேராதரவும், பங்களிப்பும் தேவைப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Board , Public, Plastic, Pollution Control Board
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி