×

பைனலில் கேகேஆருடன் இன்று பலப்பரீட்சை: கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: மகுடம் சூடும் அணிக்கு 10 கோடி பரிசு

துபாய்: பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்.9ம் தேதி இந்தியாவில் தொடங்கி பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது. ஆனால் சில வீரர்களுக்கு கொரோனா காரணமாக மே 4ம் தேதியுடன் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள போட்டிகள் செப். 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டிக்கான குவாலிபயர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் 1 போட்டியில் கொல்கத்தா அணி, பெங்களூருவை வென்றது. தொடர்ந்து நடந்த குவாலிபயர் 2 போட்டியில் கொல்கத்தா, டெல்லியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 603, டு பிளிஸ்சிஸ் 547 ரன் குவித்து சூப்பர் பார்மில் உள்ளனர். ருதுராஜ் இன்று 24 ரன் எடுத்தால் அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்சு நிற தொப்பியை லோகேஷ் ராகுலிடம் (626 ரன்) இருந்து தட்டிப்பறிக்கலாம். மிடில் ஆர்டரில் மொயின் அலி, உத்தப்பா, அம்பதிராயுடு உள்ளனர். டோனி கடைசி போட்டியில் தனது வழக்கமாக பினிசிங் பாதைக்கு திரும்பி அணியை வெற்றபெற வைத்தார். பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், ஹேசல்வுட், தீபக் சாஹர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆல்ரவுண்டர் ஜடேஜா இக்கட்டான நேரத்தில் அணியை காப்பாற்றி வருகிறார். 9வது முறையாக இறுதி போட்டியில் ஆட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011, 2018 ஆகிய 3 ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இன்று 4வது முறையாக கோப்பை முத்தமிடும் உத்வேகத்தில் களம் காண்கிறது.

மறுபுறம் கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருந்த நிலையில் அதன்பின்னர் தொடர் வெற்றிகளை குவித்து பிளே ஆப் சுற்றுக்குள் 4வது அணியாக (ரன்ரேட் அடிப்படையில்) நுழைந்தது. எலிமினேட்டரில் பெங்களூரு, குவாலிபயர் 2ல் டெல்லியை சாய்த்த உத்வேகத்தில் பைனலில் களம் இறங்குகிறது. 3வது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ள கொல்கத்தா இதுவரை ஆடிய 2 பைனலிலும் (2012, 2014ம் ஆண்டு) கோப்பையை வென்றுள்ளது. தொடக்க வீரர்கள் சுப்மான் கில் 16 இன்னிங்சில் 427 ரன், 9 போட்டிகளில் ஆடி உள்ள வெங்கடேஸ் ஐயர் 320 ரன் குவித்துள்ளனர். இவர்களின் சிறப்பான தொடக்கமே கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது. கேப்டன் மோர்கன் இதுரை 129 ரன் (சராசரியாக 11.72) மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறார். தினேஷ் கார்த்திக் 214 ரன் அடித்துள்ளார். இவர்களை தீவிர ராகுல் திரிபாதி, நிதிஷ் ரானா கை கொடுக்கின்றனர்.

பந்து வீச்சில் ஷிவம் மாவி, பெர்குசன் வேகத்திலும், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் சுழலிலும் மிரட்டி வருகின்றனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள ரஸ்சல் இன்று களம் இறங்குவார் என தெரிகிறது. கொல்கத்தா ஏற்கனவே லீக் சுற்றில் 2 முறையும் சென்னையிடம் தோல்வி அடைந்துள்ளது. அதற்கு பழிதீர்த்து பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கடந்த ஆண்டை போலவே ரூ.10 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.6.25 கோடி கிடைக்கும். அணி விபரம் சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், டு ப்ளெஸ்ஸி, மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் டோனி (கேப்டன்), டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட். கொல்கத்தா: வெங்கடேஷ் ஐயர், சுப்மான் கில், நிதிஷ் ராணா, ராகுல்திரிபாதி, இயான் மோர்கன் (கேப்டன்),  தினேஷ்கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாகிப் அல் ஹசன்,  சுனில் நரைன், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி, பெர்குசன்.

முக்கிய பங்கு வகிக்கும் டாஸ்
துபாய் மைதானத்தில் இதுவரை நடந்த 12 போட்டிகளில் 9ல் சேசிங் செய்த அணியே வென்றுள்ளது. கேகேஆர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த சீசனில் பெற்ற 6 வெற்றிகளும் சேசிங் செய்த போட்டியில்தான் கிடைத்தது.  துபாயில் நடந்த போட்டிகளில் 2ல் மட்டுமே கொல்கத்தா தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணியும் இந்த சீசனில் 2வது பேட்டிங் செய்த ஆட்டங்களில் தோற்றதில்லை. 6 முறை வெற்றிகரமாக ‘சேசிங்’ செய்திருக்கிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி சேசிங்கையே தேர்வு செய்யும்.

Tags : KKR ,Pineal ,Chennai Super Kings ,Wigudam , IPL
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே.கே.ஆர்....