திட்டம் செயல்படுத்தி 14 ஆண்டுகள் ஆகியும் 3,000 வீடுகளில் மட்டுமே மழைநீர் சேமிப்பு வசதி: மும்பை மாநகராட்சி அதிர்ச்சி தகவல்

மும்பை: மும்பையில் மழைநீர் சேமிப்பு திட்டம் செயல்படுத்தி 14 ஆண்டுகள் கடந்த பிறகும், 3,000 வீடுகளில் மட்டுமே மழைநீர் சேமிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக, மும்பை மாநகராட்சி புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.சற்று பலத்த மழை பெய்தாலே சாலையெல்லாம் வெள்ளப் பெருக்கு... ஒரு நாள் கனமழைக்கே மக்கள், வாகனங்கள் தத்தளிப்பு என்ற நிலைதான் மும்பையில் பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது முயற்சிகள் மேற்கொண்டாலும், மழைக்காலத்தில் மும்பை மக்கள் சந்திக்கும் வேதனை முடிவுக்கு வந்து விடவில்லை.

மழைநீர் வெளியேற்ற வசதி, கால்வாய் தூர்வாருதல், புதிய பைப்லைன்கள் அமைப்பது என ஒவ்வொரு மழைக்காலத்தை முன்னிட்டும், மும்பை மாநகராட்சி சார்பில் திட்டமிடல்கள் நடந்து வருகின்றன. மேலும், மழை வெள்ளம் அதிகம் உள்ள பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, பம்ப் மூலம் மழைநீரை நிரப்பி வெளியேற்றும் திட்டமும், வெளிநாட்டு பாணியில் செயல்படுத்த ஆலோசனைகள் நடந்து வந்தன.

 இது ஒரு புறம் இருக்க, மும்பையில் மற்றொரு பெரிய பிரச்னை, தண்ணீர் பற்றாக்குறைதான். மழைக்காலத்தில் வெள்ளம், மற்ற காலங்களில் தண்ணீர் கிடைக்காமல் அவதி தொடர்கதையாகி வருகிறது. இதை போக்கும் வகையிலும், நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதாவது, புதிய கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதியை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்திய பிறகும், மழைநீர் சேகரிப்பு சொற்ப கட்டிடங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 மும்பை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, கடந்த ஜூன் 2007ம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரை சுமார் 3,000 கட்டிடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்கிறது. மும்பை நகரின் தினசரி தண்ணீர் தேவை 4,200 மில்லியன் லிட்டராக உள்ளது. ஆனால், சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3,750 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் சப்ளை செய்யப்படுகிறது. அணைகளில் நீர் இருப்பை பொறுத்துதான் இது சாத்தியமாகும்.

 இந்த நிலையை போக்கும் வகையில், 1,000 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் அனைத்து புதிய கட்டிடங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என, மும்பை மாநகராட்சி கடந்த 2002ம் ஆண்டு உத்தரவிட்டது. 2007ம் ஆண்டு இதில் மாற்றம் செய்யப்பட்டு, 300 சதுர மீட்டருக்கு மேல் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு இருக்க வேண்டும் என, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. இதை செயல்படுத்தினால் மட்டுமே குடியிருப்புக்கான சான்றினை வாங்க முடியும். பின்னர் புதிய வளர்ச்சி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஒழுங்குமுறையின் அடிப்படையில், புதிய கட்டுமானம் அல்லது மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும் பிளாட்டுகள் 500 சதுர மீட்டருக்கு மேல் இருந்தால் அதில் மழைநீர் சேகரிப்பு அவசியம் என மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், இவ்வளவு செய்தும் மழைநீர் சேகரப்பு வசதி வெறும் 3,000 கட்டிடங்களில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, கடந்த 2007 மற்றும் கடந்த ஜூன் இடையேயான மும்பை மாநகராட்சி புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ‘‘மழைநீர் சேகரிப்பு திட்டம் கெடுபிடியாகத்தான் கடைப்பிடிக்கச் செய்யப்படுகிறது. கட்டுமான நிறுவனம் சார்பில் மழைநீர் சேகரிப்பு சான்று சமர்ப்பித்தால் மட்டுமே சான்று வழங்கப்படுகிறது. அதோடு, மழைநீர் சேகரிப்பு வசதி முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் நாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம். அதேநேரத்தில், மும்பையின் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க வேண்டுமானால், கழிவுநீர் சுத்திகரிப்பை தீவிரமாக செயல்படுத்துவதுதான் சிறப்பான ஒன்றாக இருக்கும். இதற்காக போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.

கேட்கவே மாட்டேங்குறாங்க...

மாநகராட்சி புள்ளி விவரம் ஒரு புறம் இருக்க, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ‘‘மும்பை மக்கள் பெரும்பாலானோரின் முக்கிய பிரச்னையே, சட்டத்தை மதித்து செயல்படாததுதான். சட்ட நடைமுறைப்படி மழைநீர் வசதியை செயல்படுத்தாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். அதுகூட போகட்டும். ஏன், நமக்கு நாமே திட்டம் போல நாமே செயல்படுத்திக் கொள்ளக்கூடாது. மழை வௌ்ளத்தில் இருந்தும் காத்துக்கொள்ள முடியுமே என்றெல்லாம் யோசிப்பதில்லை. கான்கிரீட், சிமென்ட் தரை போட்டு மண் தெரியாதவாறு செய்து விடுகின்றனர். பலனை அனுபவித்துதானே ஆக வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர்.

* 1,000 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் அனைத்து புதிய கட்டிடங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என, மும்பை மாநகராட்சி கடந்த 2002ம் ஆண்டு உத்தரவிட்டது.

* 2007ம் ஆண்டு இதில் மாற்றம் செய்யப்பட்டு, 300 சதுர மீட்டருக்கு மேல் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு இருக்க வேண்டும் என, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.

Related Stories: