பள்ளிகள் திறந்த பிறகும் வேலை நேரம் என்ற வரையறையே இல்லை போன் அழைப்புகளால் ஓயாத தொல்லை: ஆன்லைனுடன் நேரடி வகுப்பு இப்படியும் சிக்கல்?

* பரபரக்கும் பெற்றோர்

*பரிதவிப்பில் ஆசிரியர்கள்

மும்பை: பள்ளியில் கடைசி பெல் அடித்ததும் பாடம் நடத்தும் கடமை முடிந்து விட்டது என்ற நிலை, கொரோனா பரவலுக்கு பிறகு மாறி விட்டது. பள்ளிகள் திறந்த பிறகும், போன் அழைப்புகள் மூலம் சந்தேகங்களை மாணவர்களும், பெற்றோரும் கேட்டு வருகின்றனர். எனவே, பாடம் நடத்துவது ஆசிரியர்களுக்கு முழுநேர பணியாகவே மாறி விட்டது.கொரோனா பரவல் தொடங்கிய பிறகு, நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. தேர்வுகள் நடைபெறாமலேயே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ படித்தவர்கள், தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்துவது பற்றி கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் கொரோனா தடுப்பு பிரிவினருடனும், பெற்றோருடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு பற்றி கடந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியிட்ட மாநில கல்வியமைச்சர் வர்ஷா கெய்க்வாட், அக்டோபர் 4ம் தேதி முதல் ஊரக பகுதிகளில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், நகரங்களில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

பின்னர் இதற்கான வழிகாட்டுநெறிமுறைகளும்வெளியிடப்பட்டன. இந்த விவகாரத்தில் சில மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக முடிவு எடுத்திருந்தாலும், மும்பை, புனே உள்ளிட்ட மாவட்டங்கள் தொடர் ஆலோசனைக்கு பிறகு ஒரு சில நாட்கள் கழித்து அறிவிப்பு வெளியிட்டன. அதன்படி, மும்பை, புனேயில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அந்தந்த மாநகராட்சிகள் சார்பிலும், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.இதைத்தொடர்ந்து, 18 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் கடந்த 4ம் தேதி திறக்கப்பட்டன. முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி, ஒரு பெஞ்சில் ஒரு மாணவர் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். எஞ்சியவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால், வகுப்புகள் திறந்த பிறகும், கற்பிக்கும் நேரம் இதுதான் என்ற வரையறையே இல்லை என ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:முதல் பேட்ச் மாணவர்களுக்கு வகுப்புகள் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதனால், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்கள் 6.30 மணிக்கே ஆஜராக வேண்டும். கடைசி பேட்ச் மாலை 5 மணிக்கு முடிகிறது. பள்ளிக்கு அருகிலேயே வசிக்கும் ஆசிரியர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், பலர் பயணம் செய்வதற்கே 2 மணி நேரம் ஆகி விடுகிறது.நேரடி வகுப்புகளை பொறுத்தவரை, கடைசி பெல் அடித்ததும் வீட்டுக்கு போய் விடலாம். மறுநாள் வகுப்பு பற்றி, வீட்டில் நேரம் கிடைக்கும்போது திட்டமிடலாம்.ஆனால், இப்போது அப்படியில்லை. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு சந்தேகங்கள் எழுகிறது. அவர்கள் பள்ளி நேரம் முடிந்த பிறகும் போனில் அழைத்து சந்தேகம் கேட்கின்றனர். ஆன்லைன் வகுப்பின்போது பகிர்ந்து கொண்ட ஆசிரியர்களின் எண்களுக்கு மாணவ, மாணவிகளின் பெற்றோரும் போன் செய்கின்றனர். ஆசிரியப்பணி அர்ப்பணிப்புக்கு உரியதுதான். முழு நேரமும் இந்த பணி செய்வது ஒரு புறம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும், மற்றொருபுறம் இது ஒரு சவாலாகவே இருக்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் ஒரே நேரத்தில்தான் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில், வகுப்பறையில் லேப்டாப், கேமரா வைத்து அதன் மூலம் வகுப்பு ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், அறிவியல், கணிதப்பாடங்களாக இருந்தால், அவர்களுக்கு கரும்பலகையில் எழுதியுள்ள பார்முலாக்களை தனியாக ஷேர் செய்ய வேண்டியுள்ளது. இந்த பாடங்களை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்பதையும் கணிக்க முடியவில்லை. நகர்ப்புறங்களில் 8ம் வகுப்புக்கு மேல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளநிலையில், கீழ் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம்தான் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், வீட்டில் இருந்து பாடம் நடத்தி வந்த அவர்களை, பள்ளிக்கு வந்து ஆன்லைன் வகுப்பு எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையில் இடர்பாடாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கூறுகையில், பள்ளிகளுக்கு சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. முன்பெல்லாம் ‘விட்டாச்சு லீவு’ என சந்தோஷப்பட்டது போய், பள்ளிக்கு செல்ல வேண்டிய நாளை எதிர்பார்த்து ‘ஆன்லைன் மாணவர்கள்’ மற்றும் பெற்றோர் காத்திருக்கின்றனர்.

Related Stories:

More
>