கோரை புற்களை அழிக்கும் மருந்தால் விபரீதம் உல்லாஸ் நதியை பாழாக்கும் ‘விஷம்’: தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மும்பை: மும்பைக்கு குடிநீர் சப்ளை செய்யும் நதிகளில் ஒன்று உல்லாஸ் நதி. இது தானே, ராய்காட், புனே ஆகிய மாவட்டங்களில் பாய்ந்து அப்பகுதி விவசாயத்தை வளம் கொழிக்க செய்கிறது. தானே அருகே இந்த ஆறு வசாய் மற்றும் தானே கழிமுகம் என இரண்டாக பிரிகிறது. இந்த ஆற்றங்கரைகளில் முளைத்துள்ள கோரை புற்களை அழிப்பதற்காக ரசாயன மருந்து தெளிக்கப்படுகிறது. ஆற்று நீரை சுத்தம் செய்ய தானே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கேட்கும் உங்கள் கேள்வி புரிகிறது. இந்த ஆற்றில் கிளிப்போசேட் என்ற ரசாயனம் தெளிக்கப்படுகிறது.

புற்கள் சூழ்ந்துள்ளதால் தண்ணீர் பெருக்கெடுத்து ஒட முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இந்த மருந்து தெளிப்பதை சமூக ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். உல்லாஸ்நகரை சேர்ந்த வனசக்தி என்ற சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாக புகார் மனுக்களை மகாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில தலைமை செயலாளர், சுற்றுச்சூழல்துறை முதன்மை செயலாளர், தானே கலெக்டர் அலுவலகம், ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு  வனசக்தி அமைப்பின் இயக்குனரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான டி.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அதில் கூறப்பட்டுள்ளதாவது:

 உல்லாஸ் ஆற்றில் தெளிக்கப்படும் கிளிப்போசைட் என்ற ரசாயனம் தெளிப்பதை உடனே நிறுத்த வேண்டும். இந்த மருந்து விஷமாகிறது.  உல்லாஸ் ஆறு தொடர்பாக நடைபெறும் வழக்கு விசாரணையின்போது இதை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம். விஞ்ஞான ரீதியில் அல்லாத நடவடிக்கையை அரசு ஊக்கப்படுத்துகிறது. உல்லாஸ் ஆறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையின் போது கழிவு நீர் வெளியேற்றுவதை நிறுத்தவேண்டும் என்றும் தொழிற்சாலை கழிவுகளை நிறுத்த வேண்டும் என்றும் பல உத்தரவுகளை வழங்கியுள்ளது. எனவே கழிவுகளை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். ஆனால் இந்த ஆறு சுத்தமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்துக்கு தவறான தகவல் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு மாநகராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மாசடையும் நீரோட்டத்துக்கு எதிராக செயல்படுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலக்கும் கழிவுநீர்

126 மில்லியன் லிட்டரில் 30 சதவீதம் அளவுக்கு கல்யாண் டோம்பிவலி மாநகராட்சியால் தினமும் கழிவு நீர் சுத்திகரிப்பட்டு பின்னர் அதன் கழிவுகள் உல்லாஸ் ஆற்றில் கலக்க விடப்படுகிறது என சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீராக பயன்படுத்தப்படும் நீர் இவ்வாறு பாழாவது, சுற்றுச்சூழல் மாசு கெடுவதற்கும், சுத்தமான குடிநீர் சப்ளைக்கு வேட்டு வைப்பதாகவும் அமைந்து விடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அனுமதி கொடுத்தது யார்?

மகாராஷ்டிரா மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் அல்லது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றில் எது கிளைபோசைட்டை  ஆற்றில் தெளிக்க அனுமதித்தது?.கிளைபோசைட் தீங்கு விளைவிக்கும் என்பதை சொல்ல போதுமான அறிவியல் சான்றுகள் இல்லையா?

கழிவு நீர் ஆற்றில் கலப்பதை நிறுத்தினால் ஆற்றங்கரைகளில் வளர்ந்துள்ள கோரைப்புற்களை படிப்படியாக அகற்ற முடியும். ஆனால், குடிநீராக பயன்படும் உல்லாஸ் ஆற்றில் ரசாயனம் கலப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என, வனசக்தி அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: