நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை வழிபாட்டு தலங்கள் திறப்பு: கோவில்கள் திறப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய கிழமைகள் உள்பட வாரத்தின் அனைத்து நாட்களும் வழிபாட்டு தளங்களை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து வெள்ளிக்கிழமையான இன்று வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் படையெடுத்துள்ளனர். சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் என பிரதான கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஈரோடு அருகே அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் என முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டதால் காலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமையான இன்று வேளாங்கண்ணி பேராலயம் சென்று பிரார்த்தனை மேற்கொண்டனர்.

நாகூர் தர்காவில் அதிகாலை 5 மணி முதலே ஏராளமானோர் வழிபாடு செய்தனர். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கொரோனா வழிபாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Related Stories:

More
>